செய்திகள்
கோப்பாய் பிரதேசத்தில் 32 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய இராணூவ முகாம்!
கைதடி வடக்கிலுள்ள காணியொன்றில் புதிதாக இராணுவ முகாம் அமைக்கப்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஏறக்குறைய 32 பரப்புக் காணியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த இராணுவ முகாம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது முழு வேகத்துடன் இப் பணிகள் இடம்பெற்று வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த முகாம் அமைப்பதற்காக பிரதேசத்திலுள்ள தனியார் காணிகளில் படையினர் பல பனை மரங்களைத் தறித்துள்ளனர். நாம் ஒரு பனை மரம் தறிப்பதென்றாலும் அனுமதிகளைப் பெற வேண்டும். ஆனால், எவரின் அனுமதியின்றியும் படையினர் பெருந்தொகை பனை மரங்களைத் தறித்து வருகின்றனர் என மக்கள் கூறியுள்ளனர்.
சீமெந்துக் கற்களைப் பயன்படுத்தி நிலையானதாக அமைக்கப்படுகின்ற மேற்படி இராணுவ முகாமில் கட்டுமான வேலைகள் நிறைவடைவதற்குள் தமது பிரதேசத்திலுள்ள மேலும் பல பனை மரங்கள் அழிக்கப்படலாம் என்றும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
கைதடி வடக்கு கற்கரை அம்மன் கோயிலடியிலுள்ள குறித்த அரச காணியைக் கடந்த பல வருடங்களாக தனியார் ஒருவர் உரிமை கோரி வந்துள்ளார். இந்நிலையில் அது அரச காணி என்பதை அறிந்த இராணுவத்தினர் காணிக்குரிய ஆவணங்களை ஒருவாறு பெற்றுவந்து மேற்படி நபரிடம் காண்பித்து பின்னர் அதில் இராணுவ முகாம் அமைக்கும் பணியை ஆரம்பித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
மிகப் பரந்த இந்த நிலப்பரப்பில் ஆங்காங்கே பெரியதும் சிறியதுமாக கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் பல இராணுவத்தினர் இப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கின்ற மக்கள் இதனால் தாங்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
நாவற்குழிக்கு அண்மையிலுள்ள அரச காணியொன்றிலும் ஏற்கனவே இது போன்ற இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. நாவற்குழி குடியேற்றத்திட்டத்திலுள்ள அரச காணியிலும் தென்னிலங்கைச் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். தற்போது கைதடி வடக்கிலும் மேற்படி இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவருகின்றது. இவ்வாறான செயல் தொடர்பில் தென்மராட்சி மக்கள் விசனமும் கவலையும் தெரிவித்துள்ளனர்.