செய்திகள்
சாவின் விழிம்பில் உயிர் தப்பிய திருக்குமரனின் “விழுங்கப்பட்ட விதைகள்” கவிதை நூல் லண்டனில் வெளியீடு .
கொடூரமான முறையில் சித்திரவதைகள் செய்யப்பட்டு சாவின் விழிம்பில் உயிர்தப்பிய திருக்குமரனின் “விழுங்கப்பட்ட விதைகள்” எனும் கவிதை நூல் தொகுப்பு பிரித்தானியாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
நேற்று முந்தினம் 23-06-2012 சனிக்கிழமை மாலை 4:00 மணியிலிருன்து 7:00 மணிவரை லண்டன் என்பீல்ட் நாகபூசனி அம்மன் ஆலய மண்டபத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது.
எழுத்தாளர் திருமதி. சந்திரா இரவீந்திரன் அவர்களால் ஏற்பாடுசெய்யப்பட்ட திருக்குமரனின் இக் கவிதை நூல் தொகுப்பின் நூல் வெளியீட்டினை ஊடகவியலாளர் திரு. இளையதம்பி தயானந்தா அவர்கள் தலைமை தாங்கி நடாத்தினார்.
இந்த நிகழ்வில் ஆசி உரையினை என்பீல்ட் நாகபூசனி அம்மன் ஆலய பிரதம குரு சிவசிறீ கமலநாதக்குருக்கள் அவர்களும், அறிமுக உரையை திருக்குமரனின் நன்பர் கோபிநாத் அவர்களும், நூல் மதிப்பீட்டு உரையை தமிழ்ப் படைப்பாளிகளான மாதவி சிவசீலன், பால ரவீந்திரன், அ.மயூரன், முல்லை அமுதன் ஆகியோர் வழங்கினர்.
நன்றி உரையினை இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளரும், ஈழத் தமிழ் எழுத்தாளரும், மாவீரர்களின் சகோதரியுமான திருமதி. சந்திரா இரவீந்திரன் அவர்கள் வழங்கினார்.
மதிப்பீட்டு உரைகளைத் தொடர்ந்து “விழுங்கப்பட்ட விதைகள்” கவிதை நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. அதன் முதற் பிரதியை இரண்டு மாவீரர்களின் சகோதரனான திரு. கிருபா அவர்கள் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் இந்த கவிதை நூல்த் தொகுப்பினை வாங்கிச்சென்றதைக் காணமுடிந்தது.
சிறீலங்கா இராணுவ மற்றும் புலனாய்வுத்துறையினரால் இற்றைக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் கொடூரமான முறையில் சித்திரவதைகள் செய்யப்பட்டு இறந்துவிட்டான் என் நினைத்து அவனை ஏற்றிக்கொண்டு சென்று ஒதுக்குப்புறமான இடத்திலே தூக்கி வீசி எறியப்பட்டவன் தான் இந்த கவிதை நூல் தொகுப்பை இன்று எமக்கு தந்த திரு. தி. திருக்குமரன் ஆவார்.
தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சியில் மீளவும் இயங்க ஆரம்பித்த அவனது இருதயமும், இரத்த ஓட்டமும் இன்றும் எம் தமிழின விடுதலைக்காக உழைப்பது வியப்பானதாக இருந்தாலும், அது தான் அவனுள் உள்ள மன உறுதியும், இலட்சியமும் என்பது.
திருக்குமரன் மனித நேயம் மிக்க ஒரு சிலரின் உதவியுடன் இன்று மேற்குலக நாடு ஒன்றிலே வாழ்ந்து வருகின்றான். கொடிய சித்திரவதைகளால் பாதிப்பிற்குள்ளஅன அவனது உடலால் அவன் இன்று படும் அவஸ்த்தை கொடியது. அவன் இன்று படைத்துள்ள இந்த “விழுங்கப்பட்ட விதைகள்” எனும் அற்புத கவிதை நூல் தொகுப்பு ஒவ்வொரு தமிழர்களின் வீடுகளிலும் இருக்கவேண்டிய அரிய பொக்கிசமாகும்.