வருடல்

செய்திகள்

சேர். பொன். ராமநாதனின் 100வது நினைவு தினம் இன்று!

பொன்னம்பல வாணேஸ்வரர் கோவில்: இராமநாதன் கல்லூரி நிர்மாணித்தல்
அமெரிக்க சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு வந்த பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள், இரண்டு பாரிய நிர்மாண வேலைகளில் ஈடுபட்டார். கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலை மீண்டும் புதிதாக நிர்மாணித்தது. இரண்டாவது சுன்னாகத்தில் இராமநாதன் கல்லூரி அமைத்தது.

கொச்சிக்கடையில் அமைந்துள்ள பொன்னம்பலவாணேஸ்வரர் என்ற சிவன்கோவிலை, பொன்னம்பல முதலியார் 1857 ஆம் ஆண்டு நிர்மாணித்தார். கொழும்பு வாழ்மக்களுக்கு சிவனுக்கும் சக்திக்குமான ஒரு கோவில் இல்லை என்ற குறைபாட்டை நிவர்த்தி செய்யவே பொன்னம்பலம் முதலியார் இந்தக் கோவிலை நிர்மாணித்தார்.

இந்த பொன்னம்பல முதலியார், முதன்முதலாக சட்டசபை உறுப்பினராக இருந்த குமாரசுவாமி முதலியாரின் சகோதரியின் கணவராவார். இவர்தான் குமாரசுவாமி முதலியார், பொன்னம்பலம் இராமநாதன் மற்றும் சேர்.அருணாச்சலம் ஆகியோரின் தந்தையுமாவார்.

இவர் ஒரு பெரிய வர்த்தகர். மேலும் அக்காலத்தில் வாழ்ந்த சிறந்த தமிழர்களில் ஒருவராவார். அவர் 1887 ஆம் ஆண்டு காலமானார்.அதையடுத்து, இந்தக் கோவிலின் மணியகாரனாக (நிர்வாகியாக) பொன்னம்பலம் முதலியாரின் மூத்த மகனான குமாரசுவாமி முதலியாரை நியமித்தனர்.

குமாரசுவாமி முதலியார் ஒரு தவணை சட்டநிர்வாகசபை உறுப்பினராக இருந்தார். பொன்னம்பலம் இராமநாதன் தனது சட்டநிர்வாகசபை உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்த பின்னர் தேசாதிபதியினால் சட்டநிர்வாகசபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். (இவரது விபரம் தனியாகப் பின்னர் தருவோம்.) இவர் 1905 ஆம் ஆண்டு காலமான
பின்னர் பொன்னம்பலம் முதலியாரின்அடுத்த வாரிசான பொன்னம்பலம்இராமநாதனிடம் பொன்னம்பலவாணேஸ்வரன் ஆலய நிர்வாகம் வந்து சேர்ந்தது.

அவர் அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிற்பாடு இக்கோவில் நிர்வாகத்தில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். செங்கல்லாலும், சுண்ணாம்பு, சிமெந்து ஆகியவற்றால் கட்டப்பட்ட கோவிலை இடித்து தரைமட்டமாக்கி அதனைப் புதிதாக கட்டத் தீர்மானித்தார். இந்த வேலைகள் 1907 ஆம் ஆண்டு ஆரம்பமாயிற்று.

ஆரம்பத்தில் புதிய கோவிலை நிர்மாணிக்கத் தேவையான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டன. அதையடுத்து, அவர் தென்னிந்தியாவிற்குச் சென்று, அங்கிருந்த சிறந்த சிற்ப, மற்றும் கட்டடக்கலைஞர்களையும் அழைத்து வந்தார். திராவிட கட்டடக் கலையின் பாரம்பரியத்தைக் கொண்ட கோவில் ஒன்றைக் கட்டுவதற்கு திட்டங்கள் தயாரித்தார்.

அதையடுத்து, வியாங்கொடையிலுள்ள கல்குவாரியில் தேவையான கருங்கல் தூண்கள் மற்றும் இதர கருங்கற்களையும் பெற்றுக் கொண்டார். அந்த ஆலயத்தில் காணப்படும் ஒவ்வொரு கருங்கல் தூண்களும் பல ஆயிரக்கணக்கான ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டன. அந்தக் கோவில் முழுவதுமே கருங்கல்லினால் கட்டப்பட்டது.

1912 ஆம் ஆண்டளவில். அக்காலத்தில் இருபது இலட்சம் ரூபா செலவில் தனிமனிதனாக நின்று பொன்னம்பலம் இராமநாதன் அந்தக் கோவிலை கட்டிமுடித்தார்.பின்னர், 21 நவம்பர் 1912 ஆம் ஆண்டு, கட்டட வேலைகள் அனைத்தும் பூர்த்தியாகி மகா கும்பாபிசேகம் நடைபெற்றது.

பொன்னம்பலம் இராமநாதன் அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட அந்த பொன்னம்பலவாணேஸ்வரர் கோவில் போல நாட்டில் எங்குமே கருங்கல்லினால் நிர்மாணிக்கப்பட்ட கோவில் ஒன்று இல்லவே இல்லை.

அண்மையில், அமெரிக்காவின் இலங்கைக்கான ஸ்தானிகர் அற்ருல் ஹெசாப் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுடன் பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம்செய்தார். அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் அழைப்பை ஏற்று அவர் அங்கு சென்றார். அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பொன்னம்பலம் இராமநாதனின் பேரன்களில் ஒருவராவார்.

அதேசமயம், 1890 ஆம் ஆண்டளவில் பௌத்த, இந்துக் கல்லூரி ஒன்றைக் கட்டத் திட்டமிட்டார். பொதுவான சமய, கலாசார, பண்பாட்டை உருவாக்க வேண்டும் என்றே அவ்வாறு திட்டமிட்டார். தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்க சிங்களவர், தமிழர்கள் என்ற இரண்டு இன மக்களையும் இணைக்கவே இவ்வாறான ஒரு கல்லூரியை அமைக்கத் திட்டமிட்டார். இதற்காக அவர் ஆரம்ப நிதியாக ரூபா இருபத்தையாயிரத்தை வழங்கினார். ஆனால் அன்றைய பௌத்தர்கள் தமக்கு தனியான ஒரு பௌத்த கல்லூரியை கட்ட நினைத்தார்கள். அதுவே இன்று ஆனந்தாக் கல்லூரியாக விளங்குகின்றது.

இராமநாதன் யாழ்ப்பாணத்தில் ஒரு பாடசாலையை கட்ட திட்டமிட்டார். குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு என தனியான இந்துப் பாடசாலை ஒன்றைக் கட்ட நினைத்தார். அக்காலத்தில் இந்துப் பெண்களுக்கு என்று தனியாக ஒன்று யாழ்ப்பாணத்தில் இல்லை. அப்பொழுது கிறிஸ்தவ மகளிர் கல்லூரிகளே இருந்தன.

இராமநாதன் பெண்களுக்கு என்று தனியான பாடசாலை கட்ட முன்வந்த போது, கிறிஸ்தவ மதத்தினர் அதற்கு கடும் எதிரப்புத் தெரிவித்தார்கள். அவர் அமெரிக்கா சென்றபோது பெருந்தொகையான பணத்தை நன்கொடையாக பெற்றுவந்து தான் இந்தப் பாடசாலையை கட்டுகின்றார் என விசமத்தனமாக குற்றம் சுமத்தினார்கள்.

இந்தக் குற்றச்சாட்டு The Jaffna Morning Star என்ற கிறிஸ்தவப்பத்திரிகையில் வெளிவந்தது.அந்தச் செய்தி வெளிவந்த சமயம் இராமநாதனை அமெரிக்காவிற்கு அழைத்தவர்களுள் ஒருவரான மைரொன். எச்.பெல்ப்ஸ் மலேசியாவில் பிரசங்கம் ஒன்றில் பேசும்போது ‘அண்மையில் வெளிவந்த பத்திரிகைச் செய்தி ஒன்று பற்றி இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

அந்தப் பத்திரிகை பொன்னம்பலம் ராமநாதன்தான் திட்ட மிட்ட இந்துமகளிருக்கான பாடசாலையை நிர்மாணிக்க அவர் அமெரிக்க விஜயத்தின்போது சேர்த்த பணத்தால்தான் கட்ட முன் வந்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளது. அது சுத்தப்பொய். இராமநாதன் அவர்கள் அமெரிக்காவில் எனக்குத் தெரியாமல் பணத்தை நன்கொடையாக வாங்கியிருக்க முடியாது. மேலும் பொன்னம்பலம் இராமநாதன் அமெரிக்காவில் இருந்தபோது பணம் கேட்கவுமில்லை. பணம் பெறவுமில்லை. இதுதான் உண்மை’ என்று குறிப்பிட்டார்.

திரு.இராமநாதன் யாழ்ப்பாணம் வந்து, தங்கி மகளிருக்கான ஓர் இந்துப் பாடசாலையைக் கட்டுவதற்கு சரியான ஓர் இயற்கையோடு அமைந்த காணி ஒன்றைத் தேடினார்.

ஆரம்பத்தில் திருநெல்வேலியில் ஓர் இடம் இவருக்கு காட்டப்பட்டது. அந்த இடம் அவருக்குப் பிடித்துக் கொண்டது. ஆனால், அந்த இடத்தின் உறுதியில் பிரச்சினை ஒன்று இருப்பதாக கண்டுகொண்டார். பிரச்சினைக்குரிய இடத்தில் பாடசாலையைக் கட்டினால் பிற்காலத்தில் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டும் என முன் யோசனையாக அறிந்து, அந்த நிலத்தைக் கொள்வனவு செய்வதைக் கைவிட்டார்.

அதையடுத்து, கோப்பாய் பிரதேசத்தில், மகளிர் பாடசாலை அமைக்கவென 25 ஏக்கர் நிலத்தை கொள்வனவு செய்தார்.அந்தச்சமயத்தில், சுன்னாகம் மருதனார்மடத்தில் 25 ஏக்கர் காணி நிலம் இருப்பதாக அவரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த நிலத்தையும், அது அமைந்திருந்த சூழலையும் பார்த்த இராமநாதனுக்கு அந்த இடம் மிகவும் பிடித்துக் கொண்டது. அந்த நிலத்தையும் மகளிர் கல்லூரி கட்டும் நோக்கில் கொள்வனவு செய்தார்.

முதலில் கோப்பாயில் கொள்வனவு செய்த 25 ஏக்கர் நிலத்தில் 5 ஏக்கர் நிலத்தை கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை நிர்மாணிக்க அரசாங்கத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார். மீதி நிலத்தை சுன்னாகம் இராமநாதன் கல்லூரிக்கு எழுதி வைத்தார்.
அக்காலத்தில் மிகவும் பிரபலமான கட்டடக் கலைஞரான மாத்தளையைச் சேர்ந்த திரு.கந்தசாமி கல்லூரிக்கான வரைபடங்களை வரைந்தார். மேலும் கொழும்பில் மிகவும் பிரசித்திபெற்ற கப் பொறியியலாளரான பிலைத்தை (Blyche) கொழும்பிலிருந்து அழைத்து வந்து கட்டட நிர்மாண வேலைகைளை மேற்பார்வையிடச் செய்தார்.

அதையடுத்து, 3 யூன் 1910 ஆம் ஆண்டு ஒரு வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணியளவில் பெரும் திரளான மக்கள் கூடியிருக்க, பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் அக்கல்லூரிக்கான அத்திவாரக்கல்லை நாட்டினார்.

தினசரி வந்து செல்லும் 500 மாணவிகளுக்கான பாடசாலைக் கட்டடங்களை மாத்திரம் கட்டாமால், 250 மாணவிகள் தங்கிக் கல்வி கற்கும் விடுதி ஒன்றையும் சேர்த்துக் கட்டினார்.இந்து மகளிருக்கான இராமநாதன் கல்லூரி பெரும் திரளான மக்கள் சமூகமளித்திருக்க, 20 யூன் 1913 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

அதுமட்டுமன்றி, ஆசிரியர் கல்லூரி ஒன்றும் இராமநாதன் கல்லூரி வளாகத்தில் அமைத்தார். மேலும் அவர் தங்கு வதற்கென்று ஓர் சிறிய வீட்டையும் அக்கல்லூரி வளாகத்தினுள் கட்டினார். அவர் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் கொழும்பிலிருந்து வந்து அந்த வீட்டில் வந்து தங்கினார். இராமநாதன் கல்லூரிக்கு முதன் முதலாக திருமதி. புளோரன்ஸ் பார் எமறி ( Mrs.Florence Farr Emery) என்ற ஆங்கில கல்வியாளரையே பாடசாலையின் முதல் அதிபராக இராமநாதன் நியமித்தார்.

திருமணங்கள் குடும்ப வாழ்க்கை, படித்த இலங்கையருக்கான தேர்தலில் வெற்றி
முதன் முதலாக இராமநாதன் மகளிர் கல்லூரியில் அதிபராக நியமனம் பெற்ற இங்கிலாந்தைச் சேர்ந்த திருமதி. புளோரன்ஸ் பார் எமறி இலங்கைக்கு வரும்போது இங்கிலாந்தில் தனக்கு இருந்த சொத்துக்கள் எல்லாவற்றையும் விற்று விட்டு பெட்டி படுக்கையுடன் வந்துசேர்ந்தார்.

அவர் தனது 52 ஆவது வயதில் அதிபர் பதவியை ஏற்றார். இந்துசமய கலாச்சாரத்திற்கு அமைய அந்த இராமநாதன் மகளிர் கல்லூரியை நிர்வகித்து வந்தார்.

1916 இல் அவருக்கு மார்பில் கட்டி ஒன்று தோன்றிற்று. அந்தக் கட்டி புற்றுநோய் என அறியப்பட்டது. அந்தக் கட்டியை நீக்குவதற்கு சத்திரச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால்இ அதற்கிடையில் புற்றுநோய் உடல் முழுவதும் பரவிவிட்டது. அவரது 56ஆவது வயதில் ஏப்ரல் 1917ஆம் ஆண்டு கொழும்பிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் அவர் காலமானார்.

பார் எமறியின் விருப்பத்திற்கு ஏற்ப அவரது ஈமைக்கிரியை இந்து முறைப்படி நடைபெற்று, அவரது பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. அவரது அஸ்தி இந்தியாவிலுள்ள கல்யாணி ஆற்றிற்கு கொண்டு செல்லப்பட்டு இராமநாதனால் கரைக்கப்பட்டது.

இராமநாதன் நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி அவரது 23 ஆவது வயதில் நன்னித்தம்பி முதலியாரின் இரண்டாவது மகளான செல்லாட்சியை 1874 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து திருமணம் செய்தார்.

இவர்களுக்கு மூன்று ஆண் பிள்ளைகளும், மூன்று பெண் பிள்ளைகளும் பிறந்தனர். ஆண் பிள்ளைகள்-இராமநாதன் மகேசன், இராமநாதன் இராஜேந்திரா, இராமநாதன் வாமதேவன். அதே போல பெண்பிள்ளைகள் – சிவக்கொழுந்து இராமநாதன் – இவர் ‘லொக் இராசநாதனைத் திருமணம் செய்தார். மேலும், இரண்டாவது மகளான ருக்மணி இராமநாதன் சோமசுந்தரத்தை திருமணம் செய்து கொண்டார். மூன்றாவது மகளான செல்வி இராமநாதன் தம்பையா முத்துக்குமாரசாமியை திருமணம் செய்து கொண்டார்.

செல்லாச்சி அம்மையார் காலமானதன் பிற்பாடு, இராமநாதன் அவர்கள் சொலிசிற்றர் ஜெனரலாக பதவி வகித்த காலத்தில் மீண்டும் ஒரு பெண்மணி அவரது வாழ்கையில் பிரவேசித்தார். மிகவும் நாகரீகமும், கல்வியும், நற்பண்புகளும் நிறைந்த ஆர்.எல். ரிசனே அந்தப் பெண்மணியாகும். இவரது தந்தையார் இங்கிலாந்தைச் சேர்ந்த யோக்ஷயரிலுள்ள பிறாட்போட்டைச் சேர்ந்தவர். நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அவர் அவுஸ்திரேலியா சென்று, தங்கச் சுரங்கங்கள் வெட்டி தங்கம் தேடும் பணியில் ஈடுபட்டார்.

அந்தக் காலத்தில் செல்வி ‘ரிசன் ‘உண்மையை’த் தேடும் பணியில் ஈடுபட்டார். அப்பொழுது அவுஸ்திரேலியாவிலுள்ள பிரம்மஞான சபையில் ஈடுபாடு கொண்டார். அவருடைய ஆத்மஞானம் சம்பந்தப்பட்ட தாகம் அடங்குவதாக இல்லை.

அப்பொழுதுதான், இலங்கையில் சமயத்திலும் தத்துவ ஞானத்திலும் ஈடுபாடுள்ள இராமநாதன் பற்றி தெரிய வந்தது.அதையடுத்து, இலங்கை வந்து இராமநாதனை குருவாக ஏற்றுக் கொண்டு, அவருக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினார். அக்காலத்திலே அவருக்கு தமிழ்க் காப்பியங்களில் ஈடுபாடு ஏற்பட்டது. தமிழ் மொழியிலும், சமஸ்கிருதத்திலும் ஆர்வம் காட்டினார். தமிழைத் திறம்படக் கற்று தமிழ்க் காப்பியங்கள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

1905ஆம் ஆண்டு இராமநாதன் அமெரிக்காவிற்கு மதப்பிரசங்கத்திற்குச் சென்ற போது, செல்வி ‘ரிசனையும் அவரது செயலாளராக அழைத்துச் சென்றார்.

அக்காலத்தில், தனது பரபரப்பான பல முகங்களைக் கொண்ட வாழ்க்கைக்கு செல்வி ‘ரிசன் நல்ல உறுதுணையாகவும், நல்ல நண்பனாகவும் இருப்பதை உணர்ந்து கொண்டார். அதையடுத்து 1906 ஆம் ஆண்டு, அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்து வந்த சமயம் தாரம் இழந்த ஆண்மகனாக இருந்த இராமநாதன் செல்வி ‘ரிசனை இரண்டாவது தடவையாக திருமணம் செய்து, சட்டப்படி அவரைத் தனது மனைவியாக்கிக் கொண்டார்.

அந்தக் காலத்தில் இராமநாதனின் சுக துக்கங்களிலும், அமைதியிலும் தனிப்பட்ட முறையில் பெரிதும் அக்கறை காட்டினார். அவர்கள் இருவருக்கும் சிவஞானசுந்தரி என்ற ஒரே ஒரு மகள் பிறந்தார். பிற்காலத்தில் சிவஞான சுந்தரியை இந்தியாவிலிருந்து வந்த எஸ். நடேசபிள்ளைக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.

இந்த நடேசபிள்ளை எவ்வாறு இராமநாதன் குடும்பத்தில் ஒர் உறுப்பினராக இணைந்து கொண்டார் என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய விடயம். இவர் இராமநாதனின் குருவாகிய சுவாமி அருள்பரானந்ததேசிகரின் வம்சாவழியில் தோன்றியவராகும்.
நடேசபிள்ளையை ஒரு சமயம் இராமநாதன் அவர்கள் கொடைக்கானலிலுள்ள வாசஸ்தலத்தில் சந்தித்தார். அப்பொழுதுதான் இளைஞனாக இருந்த நடேசபிள்ளையின் அறிவையும், திறமையையும் பார்த்து இராமநாதன் வியப்படைந்தார். ஒரு முறை இராமநாதன் அவர்கள் நடேசபிள்ளையுடன் நீண்ட சம்பாசனையின் போது, தான் ஒரு பயிற்றப்பட்ட சட்டத்தரணி என்று கூறினார். அதைக் கேட்டவுடன்’சட்டம் என்பது படிக்கப்பட வேண்டியவற்றில் ஒன்று. ஆனால் வழக்காடப்பட அல்ல’ என்று இராமநாதன் கூறினார். மேலும் இராமநாதன் கூறுகையில்: ‘நீ ஏன் சட்டத்தரணியிலும் பார்க்க வேறு ஏதாவது சிறந்த பணியைச் செய்யக் கூடாது?’ என்று கேட்டார்.
அந்தக்காலத்தில், இராமநாதன் அவர்கள் கட்டிய ஆண்களுக்கான பாடசாலையான பரமேஸ்வராக் கல்லூரியின் ஆசிரியர் குழாமில் பணிபுரிய நடேசபிள்ளைக்குச் சந்தர்ப்பம் வழங்கினார். இராமநாதன் அவர்கள் எப்பொழுதும் தமிழ் மொழியில் பேசும் கூட்டங்களுக்கு எல்லாம் நடேச பிள்ளையையும் தனது பக்கத்தில் வைத்துக்கொண்டார்.

நடேசபிள்ளையும் தமிழ் இலக்கியங்களில் பாண்டித்தியம் பெற்றவர். இராமநாதன் மேடைகளில் பேசும் பொழுது ஒரு சில விடயங்களை குறிப்பிடுகையில், மறதியினால் தடுமாறினால் நடேசபிள்ளையிடம் அவர் தொடர்ந்துமேற்கோளை முடிக்குமாறு கேட்டுக்கொள்வார். அப்பொழுதெல்லாம் நடேசபிள்ளை சிறப்பாக இலக்கியம் சம்பந்தப்பட்ட விடயங்கள் பற்றிய மேற்கோள்களை எல்லாம் கூறிமுடிப்பார்.
நடேசபிள்ளை நீண்டகாலமாக பரமேஸ்வராக் கல்லூரியின் அதிபராகக்கடமையாற்றினார்.

அதுமட்டுமன்றி, நடேசபிள்ளை இலங்கை அரசியலிலும் ஈடுபட்டிருந்தார். அவர் இலங்கையின் மேற் சபையின் உறுப்பினராக இருந்தார். அதையடுத்து 1952ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலே இலங்கைத் தமிழரசுக் கட்சியில் காங்கேசன்துறைத் தொகுதியில் போட்டியிட்ட, அன்றைய தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தை தேர்தலிலே வென்று நாடாளுமன்ற உறுப்பினரானார்.

அந்தக்காலத்தில் தான் ஐக்கிய தேசியக் கட்சியின் களனி மாநாட்டில் சிங்களம் மட்டும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. அப்போது சிறந்த கல்விமான் ஆகிய சூ.நடேசபிள்ளை தபால் மந்திரியாக பதவி வகித்தார். சிங்களம் மட்டும் சட்டத்தை அவர் எதிர்த்தார். தனது மந்திரிப் பதவியை ராஜினாமா செய்தது மட்டுமின்றி எவ்வாறு ஐக்கிய இலங்கைக்கு தாங்கள் பாடுபட்டதையும் சிங்களமும் தமிழுக்கும் நெருங்கிய கலாச்சாரத் தொடர்பகள் உள்ளன என்று விபரித்தது மட்டுமின்றி, அக்காலத்து தமிழ் தலைவர்களும் சுதந்திரத்திற்காக போராடியவர்கள் என்று குறிப்பிட அவர் தவறவில்லை.

அதேநேரம் 1910ஆம் ஆண்டளவில் மக்கலம் சீர்திருத்தம் என்று 13ஆம் இலக்கச் சட்டமாக அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிரகாரம் சட்டசபை உறுப்பினர்கள் தொகை 18 இலிருந்து 21 பேராக உயர்த்தப்பட்டது. அதில் 11 உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள். 10 பேர் உத்தியோகப்பற்றற்ற உறுப்பினர்களாகும். அந்த உத்தியோகப்பற்றற்ற உறுப்பினர்களில் ஆறுபேர் தேசாதிபதியால் நியமிக்கப்பட்டார்கள். அதில் இருவர் கீழைத்தேய சிங்களவர்கள். இருவர் தமிழர்கள். ஒருவர் கண்டிச் சிங்களவர். மற்றும் ஒருவர் முஸ்லிம் ஆகும். மிகுதி நால்வரும் தெரிவு செய்யப்படுபவர்கள் என்று நிர்ணயிக்கப்பட்டது. அதில் இருவர் ஐரோப்பியர். ஒருவர் பறங்கியர். மற்றைய ஒருவர் படித்த இலங்கையர் என அறிவிக்கப்பட்டது.

அக்காலத்தில் கல்வி, செல்வம் அடிப்படையிலே இலங்கையில் வாக்குரிமை வழங்கப்பட்டது. நாடு பூராகவும் அப்பொழுது மூவாயிரம் பேரே வாக்குரிமை பெற்றவர்களாகும். குறிப்பாகச் சொல்வதாயின் அந்தப் படித்த இலங்கையர் தேர்தலுக்கு 2938 பேர்களே நாடு பூராகவும் வாக்களிக்கும் தகுதி பெற்றவர்களாக இருந்தார்கள்.

அத்துடன் வருமானங்களைக் கண்காணிக்கவென நிதி சம்பந்தப்பட்ட ஒரு குழு உருவாக்கப்பட்டது. இதில் காலனிச் செயலாளர், காலனித் தனாதிகாரி, மற்றும் வருமானக் கட்டுப்பாட்டாளர். அத்துடன் உத்தியோகப்பற்றற்ற தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களும் அடங்குவர்.

தேசாதிபதி சேர்.ஹென்றி மக்கலம் இந்த மாற்றங்களைக் கொண்டு வந்தார். ஆரம்பத்தில் பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் படித்த இலங்கையர் தேர்தலில் போட்டியிட பல முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. அதில் குறிப்பாக அன்றைய தேசாதிபதி சேர். ஹென்றி மக்கலம் இராமநாதனின் நியமனத்திற்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தார். மேலும், இராமநாதன் தேசாதிபதி என்ற முறையில் தன்னை மதிக்கவில்லை. தன்னை வந்து சந்திக்கவில்லை என்று எல்லாம் குற்றங்கள் சுமத்தினார்.அதுமட்டுமன்றி கிறிஸ்தவர்கள் பலரும் இராமநாதன் தேர்தலில் போட்டியிட எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.

த கத்தோலிக் காடியன் ( The Catholic Guardian ), த மோர்னிங் ஸ்ரார் (The Morning Star), ), ஆகிய பத்திரிகைகள் மத அடிப்படையில் இராமநாதன் நியமனத்தை எதிர்த்தன. யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல கிறிஸ்தவர்களான ஜெ.எம்.ஹென்ஸ்மன் (J.M.Hensman) ரி.ஹொமர் வன்னியசிங்கம் (T.Homer Vaniasingham), டபிள்யு.டி. நைல்ஸ் (W.D.Niles ), ஜே.எம்.தோமஸ் (J.M.Thomas), ஜீ.சீ.தம்பையா (G.C.Thambiah), மற்றும் வி.ஜோசெப் (V.Joseph) ஆகியோர் இராமநாதன் தேர்தலில் போட்டியிடுவதை மத அடிப்படையில் வன்மையாக எதிர்த்தார்கள்.

இறுதியில், படித்த இலங்கையர் தேர்தலுக்கான நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஒரு பிரபலமான வைத்திய நிபுணர் டாக்டர். மார்கஸ் பெர்னாண்டோ இராமநாதனை எதிர்த்துப் போட்டியிட முன்வந்தார். இவர் ஒரு கல்விமான். பி.எஸ்.சி மற் றும் எம்.டி போன்ற பட்டங்களைப் பெற்றிருந்தார். இவர் கரையாரச் சாதியைச் சேர்ந்த கரையோரச் சிங்களவர் ஆவர்.
இவரது நியமனத்தை திரு.தோமஸ் எட்வேக் டி சம்யோ பிரேரிக்க திரு.வில்லியம் மேத்தர் ஆமோதித்தார்.
அதேநேரம், இராமநாதனுக்கு நான்கு நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்தார்கள்.

முதல்நியமனப் பத்திரத்தை திரு.ஏ.டி.ஏ.செனிவரெட்ண பிரேரிக்க, வீ.காசிப்பிள்ளை வழிமொழிந்தார்.இராண்டாவது நியமனப் பத்திரத்தை திரு. ஹெக்ரர் அல்பிறட் ஜெயவர்த்தனா பிரேரிக்க, பிரான்சிஸ் டி சொயிஷா வழி மொழிந்தார்.

மூன்றாவது நியமனப் பத்திரத்தை சாஸ்பட்டு வன் ரூ டாவா பிரேரிக்க, எட்வேட் விக்ரர் டி றொசாரியோ வழிமொழிந்தார்.நான்காவது நியமனப் பத்திரத்தை திரு. எட்வேட் குணரட்ன பிரேரிக்க, திரு. ஒஸ்ரின் பார்னாண்டோ குணரட்ன வழி மொழிந்தார்.
இலங்கையின் அரசியலின் பரிணாம வளர்ச்சியிலே 13 டிசம்பர் 1911 ஆம் ஆண்டு பொன் எழுத்துக்களால் குறிக்கப்பட வேண்டிய ஒரு நாளாகும். அன்று தான் ஒன்றரை வருடத்திற்கு மேலாக படித்த இலங்கையரைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடைபெற்றது.

மொத்த வாக்காளர் என்று ஏற்கனவே குறிப்பிட்ட 2938 வாக்காளர்கள் இருந்தனர். அதில் 1659 பேர் அதாவது மொத்த வாக்காளர்களில் 56.4 வீதமான வாக்காளர்கள் சிங்களவர்களாகும். 1072பேர், அதாவது மொத்த வாக்காளர்களில் 36.4 வீதமானோர் தமிழ் வாக்காளர்களாகும். வாக்களிப்பை அடுத்து, வாக்குகள்எண்ணப்பட்டன. இராமநாதன் 1645 வாக்குகளையும், டாக்டர். மார்கஸ் பெனார்ண்டோ 981 வாக்குகளையும் பெற்றனர். இராமநாதன் 678 வாக்குகளை அதிகப்படியாக பெற்றுத் தேர்தலில் வெற்றிபெற்றார்.

ஆனால், அன்றைய தேர்தல் வாக்கெடுப்பைஅடுத்து, வாக்குகளின் எண்ணிக்கை நடைபெற்ற போது திருகோணமலை, மன்னார், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் அளிக்கப்பட்டவாக்குகள் எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. காரணம், அந்த இடங்களில் தேர்தலில் தலைமை வகித்த உத்தியோகத்தர்கள் செய்த குழறுபடியால் வாக்குகள் எண்ணப்படவில்லை. ஆனால் இராமநாதன் தனக்கு ஏகப்பட்ட ஆதரவு இருக்கும் என்று எண்ணிய இடங்களே இவையாகும்.

அன்று, யாழ்ப்பாணத்தில் மொத்தமாக 440 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தார்கள். அதில் 410 பேர் இராமநாதனுக்காக வாக்களித்திருந்தனர். இலங்கையில் முதன்முதலாக நடைபெற்ற தேர்தலில் சாதி, மத, இன பேதமின்றி சகல வாக்காளர்களும் தமிழராகிய இராமநாதனுக்கு வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்தார்கள்.

புதிதாக அமைக்கப்பட்ட சட்ட நிர்வாக சபையின் முதல் அமர்வு 16 ஜனவரி 1912 ஆம் ஆண்டு, நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முதல் அமர்வு நீண்டதூர சுதந்திர ஒளிக் கீற்றாக பரிணாமித்தது.

மேலும், நாட்டின் சுயஆட்சிக்கும், சுதந்திரத்திற்கும் வித்திடுவதாக இந்த புதிதாக அமைத்த நிர்வாக சபையின் அமர்வு அமைந்தது.
நீண்டகாலமாக, 1505 ஆம் ஆண்டு முதல் போர்த்துக்கேயர் இந்த நாட்டில் காலடி எடுத்துவைத்த காலம் தொடக்கம், 1911ஆம் ஆண்டு வரை பிற நாட்டின் அடக்கு முறைக்கு உட்பட்ட நாடாகவே இலங்கை இருந்து வந்தது.

ஆனால், 1911ஆம் ஆண்டிற்குப் பின் நம்பிக்கையூட்டுவதாகவும், ஒளிமயமான எதிர்காலத்திற்கான அறிகுறியைக் கொண்டதாகவும், அந்தச் சட்ட நிர்வாகசபை அமைக்கப்பட்ட பின்னர் தென்பட்டது. திருத்தியமைக்கப்பட்ட சட்ட நிர்வாக சபையில் 23 உறுப்பினர்கள் இருந்தனர். ஆனால், அதற்குமுன் இருந்த சட்டநிர்வாக சபையில் 15 பேர்களே இருந்தனர். புதிய 23 பேர்கள் கொண்ட சட்ட நிர்வாக சபையில் 13 பேர்கள் உத்தியோகபூர்வமாகவும், 10 பேர்கள் உத்தியோகப்பற்று அற்றவர்களாகவும் இருந்தனர்.

இந்த உத்தியோகப்பற்றற்றவர்களில் அறுவரை தேசாதிபதி நியமித்தார். மீதி நான்கு பேரும் மட்டுப்படுத்தப்பட்ட வாக்கெடுப்பினால் தெரிவு செய்யப்பட்டனர். பொன்னம்பலம் இராமநாதன் படித்த இலங்கையர்களால் தெரிவு செய்யப்பட்டார்.

அலெக்சாண்டர் பேயர்லெக், ஐரோப்பியரின் நகர் பகுதி நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் பிரதிநிதியாகவும், எட்வேட் றோசிலிங், ஐரோப்பியரின் கிராமப்புற நலன்களை பிரதிநிதித்துவம் செய்ய தெரிவு செய்யப்பட்டார். மேலும், ஹெட்ரர் வில்லியம் வான் கைலன்பேர்க் பறங்கியர்களை பிரதிநிதித்துவம் செய்வதற்கான பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்தப் புதிய சட்ட நிர்வாகசபை மாற்றங்களைப் பற்றி அன்றைய தேசாதிபதி மக்கலம் குறிப்பிடுகையில்; இது ஒரு வீணான சீர்திருத்தம். எவ்வித அனுபவமும் இல்லாத இலங்கையர் கைவசம் இந்தக் காலனித்துவ அரசாங்கத்தின் ஓரளவு நிர்வாகத்தை ஏன் வழங்கினார்கள்?’ என்று குறைப்பட்டுக்கொண்டார்.

இந்த புதிய சீர்திருத்தத்தின் பிரகாரம், இதற்கு முன்னர் ஆறு உத்தியோகப்பற்றற்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். ஆனால், இப்பொழுது 10 உத்தியோகப்பற்றற்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

இங்கு முக்கியமான விடயம் என்னவென்றால், போர்த்துகேயர் 1505 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த காலம் தொடக்கம் இன்றுவரை இம்முறைதான் மக்களால் புதிதாக தெரிவு செய்யப்பட்ட நான்கு பிரதிநிதிகள் சட்ட உறுப்பினர்களாக இருப்பதேயாகும்.
அதுவரை காலமும், ‘சட்டங்கள் உருவாக்குவதில் உங்களுக்கு எந்த விதமான சுதந்திரமும் கிடையாது,’ பிரித்தானிய காலனித்துவ ஆட்சிமுறை அமைந்திருந்தது. அதற்கு இலங்கையர்கள் விருப்பமின்றி அடிபணிந்தனர்.

ஆனால், மக்கள் தங்களின் அதிகாரங்களின் படி உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் அதிகாரங்களைப் பற்றித் தெரிந்து கொண்டார்கள். அதன்படி, சட்டங்களை உருவாக்குபவர்களை தங்களின் கீழ் எவ்வாறு கொண்டுவர வேண்டும் என்றும் தெரிந்து கொண்டார்கள்.

இது தேசியத்தின் வெற்றி. இந்த வெற்றி தேசிய ஒருமைப்பாட்டினால் இடம்பெற்றது. ஜனநாயகத்தின் வெள்ளவாய்க்கால் திறக்கப்பட்டது. அதையடுத்து, மக்களே தங்கள் சொந்தத் தேசத்தின் எசமானர்கள் என்ற கோட்பாடு படிப்படியாக வேரூண்றத் தொடங்கிற்று.1879ஆம் ஆண்டில் முதன்முதலில் பொன்னம்பலம் இராமநாதன் தமிழ்பேசும்மக்களின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட உத்தியோகப் பற்றற்ற ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார். இருந்ததிலும் பார்க்க, 1912 ஆம் ஆண்டில் படித்த இலங்கையர் சார்பில் நியமிக்கப்பட்ட பின்னரான நாட்டிற்கும் வேறுபாடுகள் நிறைய இருந்தன.

பொன்னம்பலம் இராமநாதன் 1879 ஆம் ஆண்டில் இளைஞர். 28 வயது நிரம்பியவர். அன்றுதான் முதன்முதலில் சட்டநிர்வாக சபையில் நுழைந்தார். அவரது சிறப்பு மிக்க மாமனாரான சேர்.முத்துக்குமார சுவாமி காலமானதை அடுத்து அந்த வெற்றிடத்திற்கு அவர் நியமிக்கப்பட்டார்.

‘பயத்தில் இருந்து விடுதலை பெறுவதே முக்கியமான மனித உரிமை,’ என்ற கொள்கை கொண்ட இராமநாதன் அந்த வயதிலேயே நியமன உறுப்பினரான அவர், ஏதாவது மசோதாக்கள் சட்ட நிர்வாகசபையில் அறிமுகப்படுத்தும் பொழுது, அவை அவருடைய கருத்துக்களுக்கு முரணாக இருந்தால் அவர் அதுசம்பந்தமாகப் பேச எழுந்தவுடனேயே, ‘எனது மனவருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். என்னால் இந்த மசோதாவிற்கு சம்மதம் தெரிவிக்க முடியாது,’ என அவரது வெண்கலக் குரலில் அங்கே தேசாதிபதி இருக்கிறார் என்ற அச்சமுமின்றி அவரது மனச்சாட்சிப்படி தெட்டத் தெளிவாகக் கூறுவார்.

அவர் அன்று சட்டநிர்வாகசபையில் நுழைந்ததும் உத்தியோகப்பற்றற்ற உறுப்பினர்கள் மத்தியில் ஒரு புதிய நிலைப்பாட்டை உருவாக்கினார். தேசாதிபதி மக்களின் விமர்சனத்தை சட்டை செய்ய மறுக்கின்ற பொழுது, விமர்சனம் செய்யும் உத்தியோகப்பற்றற்ற உறுப்பினர்களின் குரல்வளையை நெரிக்க முன்வரும் பொழுதெல்லாம் – பொன்னம்பலம் இராமநாதன் குறிப்பிடுவது, சட்டநிர்வாக சபை இலங்கை மக்களுக்காகவே உருவாக்கப்பட்டது. ஆனால், இலங்கை மக்கள் சட்டநிர்வாக சபையின் பெருமைக்கும், கௌவரத்திற்குமாக இல்லை.

‘ஆகவே, உத்தியோகப்பற்றற்ற கௌரவ உறுப்பினர்கள் இலங்கை மக்களின் நலன்களை கருதுபவர்களாகவும், நாட்டு மக்களின் காவலர்களாகவும் இருந்தால், மக்களின் குறைபாடுகளில் கவனம் செலுத்தி, அந்தக் குறைபாடுகளை மக்களின் நலன்களுக்கு அமைய மாற்றியமைக்க முன்வர வேண்டும்இ’ என்று கூறுவார்.

அரசியல் விவகாரங்களில் உரிமைக் குரலில் ஒலிக்கின்ற சிந்தனைகளும், எண்ணங்களும் இருக்கவில்லை. அந்தக் காலத்தில் ஒற்றுமையுடன் ஒலிக்கும் குரல்கள் இல்லை. எனவே, இதற்காகத்தான் இலங்கை தேசிய சங்கத்தை இராமநாதன் அமைத்தார். நாட்டில் இங்கொன்றும், அங்கொன்றுமாக சிதறிக்கிடந்த தேசிய பற்றாளர்களை ஒருங்கிணைத்தார். நாட்டின் இறைமையையும், சிறப்பையும் விளக்கினார். நாட்டின் சுதந்திரம் என்ற போர்க் குரலையும் எழுப்பினார்.

இராமநாதன் சுதந்திரத்திற்கு இரண்டு மூல மந்திரங்களை வெளியிட்டார். அவையாவன;
*கல்வியை பயிலுங்கள் – சுதந்திரம் அடைவதற்கு.
*ஒற்றுமையாகுங்கள் – நீங்கள் பலம் வாய்ந்தவர்களாவதற்கு.
*மூன்றாவதாகவும் ஒரு கோஷத்தை எழுப்பினார்.

அதுதான் – ‘கற்று நீங்கள் ஒற்றுமைப்படுங்கள் – நீங்கள் பலம் அடைவதற்கும், சுதந்திரம் அடைவதற்கும்’ என்றார்.
1912ஆம் ஆண்டு ஆரம்பமான புதியசட்ட நிர்வாக சபை மகிழ்ச்சியுடனும், நிறைய ஆக்கபூர்வமான எதிர்பார்ப்புக்களுடனும் ஆரம்பமாயிற்று.இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், பதின்மூன்று வருடகாலமாக இந்தச் சபையை விட்டு ஆட்சியாளர்களின் தந்திரத்தினாலும், ஒடுக்கு முறைகளினாலும், சூழ்ச்சியினாலும் ஒதுங்கியிருந்த பொன்னம்பலம் இராமநாதன் மீண்டும் மக்களால் தெரிவு செய்யப்பட்டு ஏகோபித்த ஆதரவால் சட்டசபையினுள் நுழைந்ததேயாகும்.

பொன்னம்பலம் இராமநாதன் நீண்டகால அனுபவமுள்ள இலங்கை அரசியல் தலைவர். பல அரசியல் போராட்டங்களில் வெற்றிவாகை சூடியவர். மக்களின் பிரதிநிதி. மக்களுக்கு எதிராக நடைபெறும் எந்த விடயத்தையும் துணிந்து எதிர்த்து போராடி வெற்றிபெற்றவர்.மேலும், மக்களின் உரிமைகளுக்காக போராடும் ஒரு சுதந்திர போராட்ட வீரரும் ஆவார்.

பலர், தனியொரு இனத்திற்காகவும், ஒரு சமூகத்திற்காகவும், குறிப்பிட்ட ஒரு வட்டாரத்திற்காகவும் பிரதிநிதித்துவம் செய்வார்கள். ஆனால், இராமநாதன் அவர்களோ இலங்கையில் வாழ்ந்த மூவின மக்களான தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் ஆகிய அனைவரையும் பிரதிநிதித்துவம் செய்தார்.

பெரும்பான்மை இனமான சிங்கள இன மக்களின் நலனில் மிகவும் அக்கறைகாட்டினார். அவர் சிங்கள மக்களின் பௌத்தமத கலாச்சாரப் பின்னணியின் அடிப்படையில் தான் அவர்களின் கல்வி அமையவேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், இரண்டு சிங்களவர்கள் சந்திக்கின்ற போது, அந்தச் சிங்களவர்கள் தமக்குள் தங்களின் தாய்மொழியான சிங்கள மொழியில் தான் சம்பாசணை செய்யவேண்டும் என்று எப்போதுமே கூறுவார்.

‘ஒரு சிங்களவனின் உதடு சிங்கள மொழியை பேசாவிட்டால், அந்த மொழியை வேறு யார் பேசுவார்கள்?’ என்ற கேள்வியை அவர் பலமுறை எழுப்பினார்.1947 ஆம் ஆண்டளவில் இலங்கை நாடாளுமன்றத்தின் மேற்சபையான செனற் சபையின் தலைவரான திரு.ஏ. இரத்தினநாயக்க ஒருமுறை இராமநாதனைப் பற்றிக் குறிப்பிடுகையில் – ‘இலங்கையின் மறுமலர்ச்சியின் பிதாமகன்’ என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.

சிங்கள – முஸ்லீம் கலவரம்
சிங்கள மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பொன்னம்பலம் இராமநாதன் பெரும் பங்கு வகித்தார்.பௌத்த மத ஆலோசனை மற்றும் மொழிப் போதனை ஆகியவற்றை பொன்னம்பலம் இராமநாதன்அவர்கள் பல மேடைகளில் வற்புறுத்திப் பேசினார்.
1910 ஆம் ஆண்டளவில் பௌத்த சிங்கள தேசிய உணர்வுகள் படிப்படியாக வளரத் தொடங்கின. சிங்கள பௌத்த உணர்வுகள் படிப்படியாக உருவாகத் தொடங்கிய போது, அந்த மொழி, மதத்தைச்சேர்ந்த தலைவர்களும்உருவாகத் தொடங்கினார்கள்.

அவ்வாறு உருவாகிய பௌத்த சிங்களத் தலைவர்களில் முக்கியமானவர்களுள் அநகாரிக தர்மபால (1864-1933) மிக முக்கியமானவராவார். அவருடைய இயற்பெயர் டொன் டேவிற். அவர் குமாஸ்தாவாக பணிபுரிந்தார். அவர் மல்லிகா ஹேவா வித்தாரண மற்றும் டொன் கறோலிசின் மகனாவர். அவரது தந்தையாரான டொன் கறோலிஸ் புறக்கோட்டையில் ஒரு தளபாடக் கடை வைத்திருந்தார்.

அநகாரிகதர்மபால மஞ்சள் அங்கியணிந்து, பிரமச்சரியத்தைக் கடைப்பிடித்து, உலகியல் வாழ்க்கையின் சுக துக்கங்களில் இருந்து விடுபட்டு வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த பேச்சாளராக இருந்தார். அவரது பேச்சையும் வழிகாட்டலையும், நிறையப்பேர் பின்பற்றினார்கள். குறிப்பாக மத்தியதர வர்க்கத்தினரும், கிராமப் புறத்தவர்களும், பின்பற்றினர். அவர் பௌத்த மதத்தையும் சிங்களத் தேசியத்தையும் காப்பாற்ற அயராது உழைத்தார்.

தர்மபால சிங்களவர்களுக்கு போதனை செய்யும் போது, ‘சிங்களவர்கள் சிங்கத்திலிருந்து தோன்றிய இனம். அவர்கள் உயரத்திலிருந்து வந்தவர்கள். ஆரிய வம்சத்திலிருந்து உதித்தவர்கள் என்பார். ‘உலகத்தில் எந்தவொரு இனத்திற்கும் எங்களைப் போன்றதொரு வரலாறு கிடையாது. இந்தப் பூமியிலே சிங்களவர்களைப் போல வெற்றிகரமான வரலாற்றைக் கொண்டவர்கள் யாருமில்லை என்று கூறினார்.

இந்தக் கூற்றுக்கள் எல்லாம் அடிப்படையற்ற புனைகதைகளைக் கொண்டவை. அந்த இனம் சம்பந்தப்பட்ட பேச்சுக்கள் எல்லாம் சிறுபான்மை இனத்திற்கு எதிரான பிரச்சாரமாகவே அமைந்திருந்தது. அக்காலத்தில் கம்பளைப் பௌத்த கோவிலின் பெரகரா வருடாந்த ஊர்வலம் காசில்ஹில் வீதியில் உள்ள புதிய பள்ளிவாசலுக்கு இவ்வாறு மேள தாளத்துடன் ஊர்வலம் வருவதற்கு குறிப்பிடப்பட்டுள்ளதென்று தெரிவித்து மாவட்ட அதிபரின் தடையை எதிர்த்து வழக்கு தொடுத்து நீதிமன்றம் சென்றார்கள். 100 யாருக்கு முன்பு மேளதாளம் அடிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட அரச அதிபர் அறிவித்திருந்தார்.

அதனையடுத்து, கம்பளை புத்த கோவிலின் உரிமையாளர்கள் 1815 ஆம் ஆண்டு, கண்டியர்களுக்கும் பிரித்தானியர்களுக்கும் இடையில் நடைபெற்ற ஒப்பந்தமான கண்டி சாசனத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு வழக்காடுவதற்கு நீதிமன்றத்திற்கு சென்றார்கள்.
அந்த வழக்கில் கண்டி நீதிமன்றம் பௌத்த மதத்தினருக்கு சார்பாக தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்புக்கு எதிராக அரசாங்கம் உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தது. உச்சநீதிமன்றம் கண்டி மாவட்ட நீதிமன்றின் தீர்ப்பை இரத்துச் செய்தது.உச்சநீதிமன்றின் தீர்ப்பை எதிர்த்து பௌத்தகோவில் உரிமையாளர்கள் பிரித்தானியாவில் உள்ள பிறிவிக் கவுன்ஸிலுக்கு முறைப்பாடு செய்தார்கள். அதே நேரத்தில், பௌத்தமதப்பிரசாரகர்கள்நாடுபூராவும் சென்று, முஸ்லீம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யுமாறு தூண்டிவிட்டுக் கொண்டிருந்தார்கள்.

புத்தரின் பிறந்த தினமான 28 மே 1915 ஆம் ஆண்டு வந்தது. அந்த பிறந்த தினத்தைக் கொண்டாட, இரவு ஊர்வலமாகச் சென்றார்கள். இந்தக் கொண்டாட்டமும், ஊர்வலமும் காசில்ஹில் பள்ளிவாசல் அருகில் வந்ததும் குழப்பப்ட்டது. 25 ஆண்கள் வீடுகளை உடைத்தார்கள், கலகம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்கள்.

முஸ்லீம்களுக்கு எதிராக சிங்களவர்களின் தாக்குதல் மத்திய மாகாணத்தை அடுத்த, மேல் மாகாணத்திலும் 6 யூன் 1915 ஆம் ஆண்டுவரை தீவிரமாக பரவிற்று. அதனால் முஸ்லீம்கள் நிறைய இழப்புக்களைச் சந்திக்க வேண்டி வந்தது.

அன்று கிடைத்த தகவல்களின்படி, 86 பள்ளிவாசல்கள், 4075 கடைகள்உடைக்கப்பட்டன. 35 முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள். 198 பேர் காயமடைந்தனர். நான்கு பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். அத்துடன் கிறிஸ்தவர்களின் 17 தேவாலயங்களும்எரிக்கப்பட்டன.

அன்று தேசாதிபதியாகவிருந்த சேர். றொபேட்ஸ் சாள்ஸ் மோர்ஸ் (1903-1916) மற்றும், காலனித்துவ செயலாளர் எட்வேர்ட் ஸ்ரபர்ஸ்இ இந்தக் கலவரத்தை பிரித்தானிய ஆட்சிக்கு எதிரானது என அறிவித்து இராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்தி கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர முயற்சித்தார்.அதே நேரம், பிரித்தானிய ஆட்சியாளர்கள் தேசத்துரோகிகள் எனக்கூறி பல சிங்களவர்களை கைது செய்தார்கள். அவர்களது வீடுகளையும் சோதனை செய்தார்கள்.

அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் எவ்.ஆர்.சேனநாயக்க அவரது சகோதரரான டி. எஸ் சேனநாயக்க, (இலங்கையின் முதல் பிரதம மந்திரி) டி.பி ஜெயதிலக்க டபிள்யூ ஏ.டி சில்வா எவ்.ஆர் டயஸ் பண்டாரநாயக்க ஈ.ரீ.டி சில்வா டாக்டர் கஸியஸ் பெரைராயா ஜோன். எம். செனவிரட்ண எச். அமரசூரிய டி.ஈ வீரசூரிய வண. ஜீ.டி லணரோல் எட்மனும் டாக்டரும் கேமாலித்த ரட்னேயும் அநாகரிக தர்மபாலவின் சகோதரர்கள் ஈ.ஏ.பி.விஜயரட்ண ரி.மெல் ஏ.எச்.ஈ மொளமொறே ஏ.ஈ.குணசிங்க பத்தரமுல்ல உணான்சே எட்மன் டாக்டர்சி.எச்.கேமவிதாரண. அநகாரிகதர்மபால குழப்பங்கள் நடைபெற்ற போது கல்கத்தாவில் இருந்தார். அநகாரிக தர்மபாலவின் சகோதரர்களுள் ஒருவரான எட்மன் N. கஹவா வித்தாரண சிறைச்சாலையின் உள்ளே காலமானார்.

அதேநேரம், பல சிங்களவர்கள் சிறைச்சாலையினுள்ளே வைத்து கொலை செய்யப்பட்டார்கள். இந்தக் கலவரத்தை அடக்குவதற்கு பஞ்சாப்பிலிருந்து இராணு வீரர்கள் அழைத்து வரப்பட்டார்கள்.அந்த இராணுவத்தினரால் காணும் இடங்களில் எல்லாம் அப்பாவிச் சிங்களவர்கள் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானார்கள்.

அந்தக் கலவரம் ஆரம்பமான காலத்திலேயே, படித்த இலங்கையர்களை பிரதிநிதித்துவம் செய்த பொன்னம்பலம் இராமநாதன் உடல்நலம் குன்றியதால் அவரது கொடைக்கானலில் உள்ள வாசல் ஸ்தலத்தில் தங்கியிருந்தார்.
அந்த சமயம், பல சிங்களத் தலைவர்கள் அவரை நாட்டிலுள்ள பிரச்சினைகளை எடுத்துக் கூறி உடனடியாக நாட்டிற்கு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்துக் கொண்டேயிருந்தார்கள்.

அதனையடுத்து, இராமநாதன் உடனடியாக நாட்டிற்கு திரும்பினார். நாட்டிற்கு திரும்பி வந்த இராமநாதன், தேசாதிபதியைசசந்திக்க நேரம் கேட்டார். ஆரம்பத்தில் சந்திப்பிற்கான அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டபோதும், இறுதியில் நேரம் ஒதுக்கப்பட்டது. இராமநாதன் காலனித்துவ செயலாளரான ஸ்ரப்ஸ்சையும் சந்தித்து கலவரம் நடைபெற்றமைக்கான காரணங்களை தேசாதிபதிக்கு எடுத்துக் கூறினார்.

மேலும், சட்ட நிர்வாக சபையில் மொத்தமாக ஆறு பேச்சுக்களை வழங்கினார். அந்தப் பேச்சுக்களில் அரசாங்கம் கலவரம் அடக்க எடுத்த நடவடிக்கைகளை வன்மையாக கண்டித்தார். அத்துடன் உத்தியோகஸ்தர்களின் சர்வாதிகாரப் போக்கையும் சாடினார்.
இராமநாதன் சிறையில் அடைக்கப்பட்ட சிங்களத் தலைவர்களை சிறைக்குச் சென்று சந்தித்து, அவர்களிடம் நடந்த சம்பவங்கள் தொடர்பாக தனித்தனியாக சத்தியக் கடதாசிகளையும் பெற்றுக் கொண்டார். அரசாங்கம் கலவரத்தை அடக்க கையாண்ட முறையே இந்த பாரதூரமான சம்பவம் நடைபெறக்காரணம் என அரசாங்கத்தையே குற்றம் சுமத்தினார்.

அப்பொழுது, 21 ஒக்ரோபர் 1915 ஆம் ஆண்டு கல்கத்தாவில் வசித்துவந்த அநகாரிகதர்மபால பொன்னம்பலம் இராமநாதனுக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், ‘நாடாளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய வரலாற்றுப் புகழ் மிக்க சொற்பொழிவுகளுக்கு என்னுடைய நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன். இலங்கையில் நீங்கள் எப்பொழுது இல்லையோ, அன்றிலிருந்து ஏழைச் சிங்களவர்களுக்கு பாதுகாப்பளிக்க யாரும் இருக்க மாட்டார்கள்.சிங்களவர்கள் வழிகாட்ட யாரும் இன்றி ஒடுங்கிப் போவார்கள்.

இன்றைய நிலையில், இலங்கையை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். இந்தியாவின் பாதுகாப்பு இல்லாவிட்டால், இலங்கை வீழ்ச்சியுற்றுவிடும். இலங்கையை இந்தியாவின் கீழ் கொண்டுவந்து, மெட்ராஸ் அல்லது வங்காள மாவட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.அநீதியால் பாதிக்கப்படும் ஏழைச் சிங்களவர்களைப் பாதுகாக்க நீங்கள் முன்வர வேண்டும்’ என்று எழுதியிருந்தார்.

நாட்டிலே சிங்களவர்களுடையநிலைமை மோசமடைந் ததையடுத்து, அவர் பிரித்தானியாவிற்கு சென்று அங்குள்ள உயர் அதிகாரிகளுடன் பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று எண்ணினார். ஏற்கனவே அவரது உடல் நிலை பாதிப்படைந்திருப்பதனால், அவரைப் பிரித்தானியப் பயணத்தை கைவிடுமாறு, அவரது பாரியார் மிகவும் வினயத்துடன் கேட்டுக் கொண்டார்.

ஆனாலும், சிங்களத் தலைவர்களை விடுவிக்க 30 ஒக்ரோபர் 1915 ஆம் ஆண்டு, ‘எம்.எம். போல் லொக்காற்’ என்ற கப்பலில் பயணமானார். அக்காலத்தில் முதலாவது உலக யுத்தம் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருந்தது. கடற்பரப்புகளில் ஜேர்மனியர்கள் வைத்திருந்த கண்ணிவெடிகளை எல்லாம் கடந்து இராமநாதன் சென்ற கப்பல் பிரித்தானியாவை அடைந்தது.

பிரித்தானியவைச் சென்றடைந்து, ‘இலங்கைக் கலவரமும் 1915 ஆம் ஆண்டிற்கான இராணுவச் சட்டமும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை பிரித்தானிய மக்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் வெளியிட்டார்.

அக்காலத்தில் காலனியை நிர்வகிக்கும் செயலாளரான மேர்லோவை, இராமநாதன் பலமுறை சந்தித்தார். அதுமட்டுமன்றி, ஏனைய அமைச்சர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து, இலங்கை நிலவரம் பற்றி எடுத்துக் கூறினார்.

உடனடியாக இராணுவச் சட்டத்தை இரத்துச் செய்யும் படி கோரிக்கை விடுத்தார். சிங்கள மக்களுக்கு எதிராகப் பஞ்சாப்பி படையினரும், பொலிஸ் மா அதிபரான சேர். ஹேர்பேட் டௌபிக்கின் தலைமையிலான பொலிஸாரும் நடாத்திவரும் அட்டகாசம் பற்றி எடுத்துக் கூறினார்.

இலங்கையிலுள்ள பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பலைகள் கிளம்பிற்று. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பபட்டன.பொன்னம்பலம் இராமநாதன் பிரித்தானியாவில் எடுத்துக் கொண்ட முயற்சிகளின் பலனாக, இலங்கைத் தேசாதிபதி சேர். றொபேட் சாள்ஸ் மோர்ஸ் பிரித்தானியாவிற்கு திருப்பியழைக்கப்பட்டார்.

இலங்கையில் நிலைத்து நின்ற இராணுவச் சட்டம் இரத்துச் செய்யப்பட்டது. மேலும், மறியலில் அடைத்து வைக்கப்பட்ட சிங்களத் தலைவர்கள் எல்லாம் விடுதலை செய்யப்பட்டனர்.இலங்கையின் புதிய தேசாதிபதியாக சேர்.ஜோன் அன்டேசர் (1916-1918) நியமிக்கப்பட்டார். இராமநாதனின் முயற்சியை சிங்களவர்கள் பெரிதும் பாராட்டினார்கள். வெற்றிகரமாக சிங்களத் தலைவர்களை விடுதலை செய்த பின் ‘பி அன் ஓ மாலவா’ கப்பலில் 17 பெப்ரவரி 1916 ஆம் ஆண்டு இராமநாதன் நாடு திரும்பினார்.

துறைமுகத்தில் வந்திறங்கிய இராமநாதனை வரவேற்க சிங்களத் தலைவர்கள் அடங்கிய ஒரு வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. ஏ.ஈ.குணசிங்க,ஏ.டபிள்யூ.பி ஜெயத்திலக்க, ஆர்.ஈ .டபிள்யூ பெரேரோ, பி.என் ஜெயநெற்றி மற்றும் லயனெல் கொத்தலாவல, (முன்னாள் பிரதம மந்திரி) ஆகியோர் துறைமுக வாசலில் மாலைகளுடன் வரவேற்க காத்திருந்தனர்.துறைமுகத்திலிருந்து வெளியே வந்த இராமநாதனை சிங்களத் தலைவர்கள் தமது தோளில் சுமந்து அவரது கொள்ளுப்பிட்டியவில் உள்ள வாசஸ்தலத்திற்கு ஒரு வீரரைப் போல ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள்.

1920 ஆம் ஆண்டு கீரிமலையில் இந்து வாலிபர் சங்கத்தின் வருடாந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் தலைமை தாங்கினார். வருடாந்த இந்து வாலிபர் சங்கத்தில் பங்குபற்றிய இளைஞர்கள், இந்து இளைஞர்களுக்கு என்று தனியான கல்விக்கு கல்லூரி ஒன்று கட்டித்தருமாறு கேட்டுக் கொண்டார்கள்.

ஏற்கனவே 20 யூன் 1913 ஆம் ஆண்டில் சுன்னாகத்தில் இந்து மகளிர்களுக்கு என்று ஒரு கல்லூரி பொன்னம்பலம் இராமநாதனால் கட்டப்பட்டது தெரிந்ததே. இதன் அடிப்படையிலேயே இளைஞர்களுக்கு என்று ஒரு கல்லூரியைக் கட்டித் தருமாறு வேண்டுகோள் விடுத்தார்கள். இளைஞர்கள் விடுத்தவேண்டுகோளை அடுத்து, திருநெல்வேலியில் 25 ஏக்கர் நிலத்தை இராமநாதன் கொள்வனவு செய்து, இந்து இளைஞர்களுக்கான கல்லூரியாக பரமேஸ்வராக் கல்லூரியை நிர்மாணித்தார்.

அந்தக் கல்லூரியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தங்கியிருந்து படிக்க விடுதி ஒன்றையும் கட்டினார். அந்த மாணவர்களின் விடுதிக்கான உணவுச் செலவுக்காக கிளிநொச்சியில் 400 ஏக்கர் நிலத்தினை வாங்கி கல்லூரியின் பெயரில் எழுதி வைத்தார்.22 ஒகஸ்ட் 1921 ஆம் ஆண்டு கல்லூரி திறந்து வைக்கப்பட்டது.

அந்தக் கல்லூரியின் பாலர் பாடசாலைக்கு அதிபராக அக்காலத்தில் சைவ சித்தாந்தத்தில் அதிகாரம் பெற்றவர் என்றும், தத்துவமேதை என்று கருதப்பட்டவரும், கல்வியில் நீண்ட காலம் அனுபவம் பெற்றவருமான எஸ்.சிவபாலசுந்தரம் அவர்கள் நியமனம் பெற்றார். அதேபோல உயர் வகுப்புக்கான அதிபராக கல்விமானும், சட்டத்தரணியுமான பிற்காலத்தில் சேர் பட்டம் பெற்ற சேர்.ஏ.மகாதேவா அதிபராக நியமிக்கப்பட்டார்.

பரமேஸ்வராக் கல்லூரியில்தான், முதன்முதலில் தமிழ்நாட்டில் இருந்து வந்த எஸ். நடேசபிள்ளை அவர்கள் ஆசிரியராகவும், பிற்காலத்தில் கல்லூரியின் தலைவராகவும் கடமையாற்றினார்.1962 ஆம் ஆண்டு இந்தப் பாடசாலை அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டு அரசாங்கப் பாடசாலையாக விளங்கிற்று.

ஆரம்பத்தில் இருந்தே இந்தப் பரமேஸ்வராக் கல்லூரி வடமாகாணத்தின் கல்வியில் முக்கிய கேந்திர நிலையமாக அமையும் என்று கல்லூரியைக் கட்டிய பொன்னம்பலம் இராமநாதன் எதிர்பார்த்தார் என்று கூறப்படுகின்றது.

1974 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் கல்வி அமைச்சர் பரமேஸ்வராக் கல்லூரியை, ஆரம்பத்தில் உயர்கல்வி நிலையமாக யாழ்ப்பாண கம்பஸ் என்ற அந்தஸ்துடன் உருவாக்கினார். யாழ்ப்பாண பல்கலைக்கழகமாக பின்னர் அது உருவாகிற்று. இதனை அன்றைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டராநாயக்க 1974 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 6 ஆம் திகதி திறந்து வைத்தார்.அன்று, இந்து இளைஞர்களுடைய கல்விக்கு வித்திட்ட பொன்னம்பலம் இராமநாதனின் பரமேஸ்வராக் கல்லூரி, இன்று தமிழ் இளைஞர்களின் உயர்கல்விப் பீடமாக மாறியுள்ளது.
1921 ஆம் ஆண்டு இலங்கைக்கு அன்றைய முடிக்குரிய இளவரசர் விஜயம் செய்தார். அவரை வரவேற்று வரவேற்புரை நிகழ்த்துவதற்கு பொன்னம்பலம் இராமநாதன் அவர்களை பிரித்தானிய அரசாங்கம் கேட்டுக்கொண்டது.

அன்று மதியம் 12 மணிக்கு, பிரித்தானிய இளவரசர் கொழும்புத் துறைமுகத்தில் வந்து இறங்குவார் என அறிவிக்கப்பட்டது. எனவே காலை 10 மணி தொடக்கம் துறைமுகத்தை நோக்கிச் செல்லும் எல்லா வீதிகளும் மூடப்பட்டன. வீதிகள் எங்கும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.அப்பொழுது 11.45 மணிக்கு ஒரு மோட்டார் வாகனம் துறைமுகத்தை நோக்கி வந்துகொண் டிருந்தது. வாகனங்கள் எல்லாம் தடைசெய்யப்பட்ட பின்னர் எவ்வாறு இந்த வாகனம் மட்டும் வந்து கொண்டிருக்கின்றது என விசனமடைந்த பொலிஸ் அத்தியட்சகர் நிறுத்தினார்.

வயதில் முதிர்ந்தவரான பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் வாகனத்தினுள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியும்ஆ,ச்சரியமும் அடைந்த பொலிஸ் அத்தியட்சகர் ‘சலூட்’ அடித்து மேற்செல்லுமாறு அனுமதியளித்தார்.

அதேபோல தடைசெய்யப்பட்ட, வீதியில் வந்து கொண்டிருந்த இராமநாதன் வாகனத்தைப் பார்த்த வேறு ஒரு பொலிஸ் அத்தியட்சகர் வாகனத்தை மறித்தார். இராமநாதன் அமர்ந்திருந்ததைக் கண்ட அந்த பொலிஸ் அத்தியட்சகரும் இராம நாதனுக்கு ‘சலூட்’ அடித்து அவரை மேலும் செல்ல வழிவிட்டார்.

இவ்வாறு இரண்டு பொலிஸ் அத்தியட்சகர்களும் தடைசெய்யப்பட்ட வீதியில் வந்த இராமநாதன் அமர்ந்திருந்த வாகனத்தை செல்வதற்கு அனுமதித்தை அவதானித்த பொலிஸ்மா அதிபர் தடைசெய்யப்பட்ட வீதியில் மோட்டார் வாகனத்தை செல்ல எவ்வாறு அனுமதிப்பார்கள் என விசனமடைந்து தனது குதிரையை அந்த வாகனத்தை நோக்கி முடுக்கிவிட்டார்.

குதிரையில் வந்தடைந்த பொலிஸ்மா அதிபர் வாகனத்தினுள் பொன்னம்பலம் இராமநாதனைப் பார்த்தவுடன் குதிரையிலிருந்து இறங்கி, ‘சலூட்’ அடித்து துறைமுகம் செல்ல அனுமதித்தார். பொன்னம்பலம் இராமநாதனும் குறித்த நேரத்திற்கு துறைமுகத்தை அடைந்து, முடிக்குரிய இளவரசரை வரவேற்றார்.

1911 ஆம் ஆண்டு தொடக்கம் அரசாங்கத்தை தொடர்ந்து விமர்சித்துக் கொண்டிருந்த பொன்னம்பலம் இராமநாதனுக்கு, 1921 ஆம் ஆண்டு ஐந்தாம் ஜோர்ச் மன்னரால் கௌரவிக்கப்பட்டு ‘சேர்’ பட்டம் வழங்கப்பட்டது. அதையடுத்து அவரை சேர். பொன்னம்பலம் இராமநாதன் என்று அழைத்தார்கள்.

1924 ஆம் ஆண்டு சேர்.பொன்னம்பலம் இராமநாதனுடைய மலேயா விஜயம் ஒரு மறக்கமுடியாத நிகழ்ச்சியாக அமைந்தது. மலேயாவில் வாழும் இலங்கையர்களின் நீண்டகால ஆவலைப் பூர்த்தி செய்யும் விதமாகவே சேர். பொன்னம்பலம் இராமநாதன் அங்கு விஜயம் செய்தார். அந்தக் காலத்தில்தான் மலேயாவின் வரலாற்றிலேயே முதன்முதலாக இங்குள்ள இலங்கையர்கள் பொது நிர்வாகத்தின் முதுகெலும்பாக இருந்தார்கள்.

அங்கு வாழ்ந்த இலங்கை மக்களின் பொதுநிர்வாக சேவை பிரித்தானிய ஆட்சியில் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மலேயாவை ஆட்சி புரிந்த பிரித்தானிய காலனித்துவ அரசுக்கு, மலேயா ஒரு நீண்ட காடுகள் கொண்ட நாடாகவும், ஆங்காங்கே சில நகரங்களும், கிராமங்களும் உள்ளதாகவும் அமைந்திருந்தது.

அக்காலத்தில், மலேயாவில் மலேரியா நோயும், வனவிலங்குகளும் நிறைந்திருந்தன. மலேயாவின் இயற்கை வளங்களை பிரித்தானியர் நல்லமுறையில் பயன்படுத்த முன்வந்தார்கள்.

ஆனால் மலேயாவில் இந்த அபிவிருத்தி வேலைகளையும், நிலத்தைப் பயன்படுத்தும் திட்டங்களையும் செயற்படுத்தத் தேவையான ஆட்கள் கிடைக்கவில்லை.

அக்காலத்து மலேயா மக்கள் கல்வியறிவு அற்றவர்களாகவும், கிராமப்புறங்களிலேயே வாழ்ந்தும் வந்தார்கள். எனவே, அந்த நாட்டை அபிவிருத்தி செய்யும் பணிகளில் மலேயர்கள் பிரயோசனமற்றவர்களாக இருந்தார்கள். இதனால் மலேசியாவிலுள்ள பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு பெரும் சங்கடம் ஏற்பட்டது.

அதையடுத்து, அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபட வேறு இடங்களிலிலிருக்கும் மக்களை எடுப்பது என முடிவு செய்தார்கள்.அந்த முடிவின் பிரகாரம் மலேயாவின் பிரித்தானிய ஆட்சியாளர்களின் கவனம் இலங்கையின்பால் திரும்பிற்று. கல்வியறிவு வாய்ந்த பெருமளவு இளைஞர்களை மலேயாவிற்கு வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்கள்.

அந்தக் காலத்தில்தான் மலேயாவில் இருந்த இலங்கைச் சமூகத்தினர் சேர். பொன்னம்பலம் இராமநாதனை அங்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். இலங்கை மக்களுக்கு அவர் செய்த சேவைகள் பற்றிய விபரங்கள் எல்லாம் அங்கும் போய்ச்சேர்ந்தது. சேர் பொன்னம்பலம் இராமநாதனின் புகழ் எல்லை கடந்து மலேயாவிற்கும் பரவியிருந்தது.

அக்காலத்தில் மலேயாவில் வாழ்ந்த தமிழ் மக்களின் மனித உரிமைகள் எல்லாம் பறிக்கப்பட்டிருந்தன.

எனவே, அந்த மக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து மலேயா செல்ல சம்மதம் தெரிவித்தார் சேர்.பொன்னம்பலம் இராமநாதன். அவர் மலேயா வர சம்மதித்ததை கேள்வியுற்ற மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். இலங்கையின் பெரிய தேசியத் தலைவரை வரவேற்பதற்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் எல்லாம் செய்தார்கள்.

மலேயாவின் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள நகர மண்டபத்தில் வரவேற்பதற்கான பிரமாண்டமான முதல் கூட்ட ஏற்பாடுகள் நடைபெற்றன.பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி 1924ஆம் ஆண்டு, சேர். பொன்னம்பலம் இராமநாதனும் அவரது மனைவியாரும், மகளும் கப்பலில் கொழும்பிலிருந்து மலேயாவிற்குப் புறப்பட்டார்கள்.

அவர் சிங்கப்பூர் துறைமுகத்தைச் சென்றடைந்தவுடன், அங்கு வைத்து பிரித்தானிய ஆட்சியிலுள்ள உயர் உத்தியோகத்தர்கள் மற்றும் அங்கு வாழ்ந்த பல்லினத் தலைவர்களும், அவரை சிறப்பாக வரவேற்று, ஊர்வலமாக விக்ரோறியா ஞாபகார்த்த மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்குவைத்து பிரமாண்டமான வரவேற்பு வழங்கினார்கள்.

சேர். பொன்னம்பலம் இராமநாதன் மலேயாவிற்குச் சென்றார். அங்கே அவர் மலேயா நாட்டின் ஆளுநர் மற்றும் பல மாநிலத்தின் அரசர்கள் (சுல்தான்) எல்லோரினதும் கௌரவ விருந்தினராக இருந்தார். அவர்களுடன் இராமநாதன் இலங்கை மக்களின் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றி எல்லாம் கலந்துரையாடினார். இலங்கை மக்கள் மலேயா நாட்டின் அபிவிருத்திக்குச் செய்த அளப்பரிய சேவைகளையும் எடுத்துக் கூறினார்.

மேலும், ஆரம்பகாலத்திலிருந்து இலங்கைமக்கள் மலேயாவிற்குச் செய்த தியாகங்களையும், அளப்பரிய சேவைகளையும் மறக்க வேண்டாம் என்று எடுத்துக் கூறினார்.அவர் ஆளுநர், மற்றும் மன்னர்கள், உயர் அதிகாரிகள் இலங்கை மக்கள் மீது அக்கறைப்படும் விதத்தில் தனது நடவடிக் கைகளை மேற்கொண்டார்.

அன்று, 1922 ஆம் ஆண்டில் பல நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் மலேயா சேவையிலிருந்து வேலைநீக்கம் செய்யப்பட்டார்கள். அவர்களை மீண்டும் வேலையில் சேர்க்கவும் அவர் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.அவரின் அந்த மறக்கமுடியாத விஜயத்தின் போது மலேயாவில் இருந்த இலங்கை வாழ் மக்களுக்குச் செய்த அரும்பெரும் சேவையை கூறாமல் இருக்க முடியாது.

சேர். பொன்னம்பலம் இராமநாதன் மலேயாவிலுள்ள பல மாநிலங்களுக்கு பயணம் செய்ய வசதியாக ஒரு விசேட புகையிரதம் அவருக்கு வழங்கப்பட்டது. இராமநாதன் அவர்கள் பல நகரங்களுக்கும், பட்டணங்களுக்கும் சென்று பிரசாரங்கள் செய்தார். அவரது பேச்சை மக்கள் மிகவும் கவனத்துடனும், ஆர்வத்துடனும் கேட்டார்கள்.

மலேயாவில் வாழ்கின்ற இலங்கைமக்கள் உட்பட எல்லா இனத்தவர்களும், சகோதரர்கள் போல இணைந்து வாழ வேண்டும் என்று எடுத்துக் கூறினார். அங்கு வாழ்ந்த சீன மக்களின் உயர்ந்த பண்புகளை எடுத்துக் கூறினார். சீனர்கள் நற்பண்புள்ளவர்கள், கருணையுள்ளவர்கள் மற்றும் தாராள மனப்பான்மையுள்ளவர்கள் என்று வானளாவிப் புகழ்ந்தார். அந்த நாட்டில் வாழ்ந்த சீனப் பெண்கள் பற்றியும், அவர்களுடைய பெருமைகளையும், அவர்களது மத ஈடுபாடுகளையும் பெருமையாக விளக்கிக் கூறினார்.

கூட்டங்களில் பேசும் பொழுது, சகல இனங்களுக்கிடையிலான உறவு, ஐக்கியம் என்பவையே அவரது பேச்சின் மூலமந்திரமாக அமைந்திருந்தது. சேர். பொன்னம்பலம் இராமநாதனுக்கு வெள்ளியிலான கைத்தடி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அந்த அன்பளிப்பு அருமையானதும், விலைமதிப்பற்றதும் என சேர். பொன்னம்பலம் இராமநாதன் புகழ்ந்து பாராட்டினார்.

ரெய்பிங்கில் சேர்.பொன்னம்பலம் இராமநாதன் பெராக் மாநிலத்தில் சுல்தானின் அரண்மனைக்கு ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டார். கீழைத்தேய மேளதாளங்கள் முழங்க, அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.அவருடைய மலேயா விஜயம் குறுகிய காலமாக அமைந்திருந்த போதிலும்இ பயனுடையதாக இருந் தது.

மலேயாவில் அவர் இருந்த போது, இலங்கை மக்களுக்கு அரசாங்கத்தின் நன்மதிப்பையும் ஆதரவையும் பெற்றுக் கொடுத்தார். மேலும் அங்கு வாழ்ந்த பல இனங்களின் மத்தியில் ஒற்றுமையையும் வளர்த்தார்.

அவருக்கு அரசர்களாலும், இளவரசர்களாலும் அரண்மனையில் வழங்கப்பட்ட உபசரிப்புக்களை எல்லாம் இங்கே ஒவ்வொன்றாக எடுத்துக் கூறமுடியாது. அந்த உபசரிப்புக்கள் என்றுமே மறக்க முடியாதவை. இதற்கு முன்னர் மலேயாவிற்கு விஜயம் செய்த எந்தத் தலைவர்களுக்கும் அதுவரை அவ்வாறான வரவேற்பு கிடைக்கவில்லை என்பது தான்உண்மை.சேர். பொன்னம்பலம் இராமநாதன் 1924 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறுதி வாரத்தில் மலேயாவை விட்டு இலங்கைக்குத் திரும்பினார்.

அவ்வாறு மலேயாவை விட்டு இராமநாதன் திரும்பும் போது, அங்கு வாழ்ந்த இலங்கைத் தமிழ் மக்கள் யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் அமைந்திருந்த இராமநாதன் கல்லூரிக்கு 52 ஆயிரம் டொலர்களை அன்பளிப்பாக வழங்கினார்கள். ஆனால் சேர்.பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் வழங்கிய பண அன்பளிப்பை வாங்க மறுத்துவிட்டார்.அவ்வாறு அவர்கள் சேர்த்த பணத்தை வைத்து மலேயாவில் தமிழ் மக்களுக்கான ஒரு பத்திரிகையை ஆரம்பித்து நடாத்துவதற்குப் பயன்படுத்துமாறு அவர்களிடம் சேர்.பொன்னம்பலம் இராமநாதன் கேட்டுக்கொண்டார்.

பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம் இலங்கை அரசியல் சீர்திருத்தம் சம்பந்தமாக ஆராய்வதற்கு 1927 ஆம் ஆண்டு டொனமூர் பிரபுவின் தலைமையில் ஒரு விசேட விசாரணைக் குழுவை இலங்கைக்கு அனுப்பிவைத்தது.

இந்த ஆணைக்குழுவில் சேர். மத்தேயு நாதன், சேர். ஜோவ்பிறே பட்ளர், மற்றும் சேர். றம்மொண்ட் ஷீல்ஸ் ஆகியோர் அடங்கியிருந்தனர்.’இலங்கைக்கு விஜயம் செய்து தற்சமயம் அமுலிலுள்ள அரசியல் சட்டம் சம்பந்தமாகவும், நிர்வாகத்திற்கு அது சம்பந்தமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் பற்றியும், அதனை மீள்பரிசோதனை செய்வதற்கான பிரேரணைகளையும், மேலும் வரும் காலத்தில் அரச ஆணைக்கு செய்யப்பட வேண்டிய சிபாரிசுகளை அறிக்கை செய்யவும், என்ற ஆணைப்படி அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்தார்கள்.

இந்த ஆணைக்குழு 1927 ஆம் ஆண்டு, ஒக்ரோபர் 27 ஆம் திகதி பிரித்தானியாவை விட்டுப் புறப்பட்டு நவம்பர் 13 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தது. இந்த ஆணைக் குழு இலங்கையில் 1928 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி வரை தங்கியிருந்து விசாரணைகளை மேற்கொண்டது. இவர்கள் மொத்தமாக மேற்கொண்ட 34 அமர்வுகளில், 140 சாட்சிகளையும், தூதுக் குழுவினரையும் சந்தித்தனர்.

இந்த ஆணைக்குழுவை மூன்று முக்கிய தமிழர் அமைப்புக்கள் சந்தித்தன. அவையாவன இலங்கைத் தமிழர் லீக்,( League), தமிழ் மகாஜன சபை மற்றும் அகில இலங்கை தமிழர் மாநாடு.

தமிழர்கள் 1924 ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தின்படி 2:1 விகிதாசார சிங்கள, தமிழ் ஆசனங்கள் வேண்டும் என வற்புறுத்தினார்கள். அந்த ஆணைக்குழுவிற்கு திரு. டபிள்யூ. துரைசாமி, யாழ்ப்பாணச் சங்கத்திற்கும். திரு.எம்.ஸ்ரீ பத்மநாதன் இலங்கைத்தமிழர் மாநாட்டையும் பிரதிநிதித்துவப்ப டுத்தினார்கள்.

இவர்கள் 2:1 விகிதாசார அடிப்படையில் சிங்கள தமிழர் ஆசனம் அமைக்கப்பட வேண்டுமென வற்புறுத்தினார்கள். ஆனால் சுயஆட்சி வழங்கப்பட்டால், அது நாட்டிலே சிங்கள ஆட்சியை உருவாக்க வழங்கப்படும் அதிகாரம் என பல தமிழ் அமைப்புக்களும் கருதி சிங்களத் தலைவர்கள் கோரும் சகல சலுகைகளையும் அவர்கள் எதிர்த்தார்கள்.

அதே நேரத்தில் ஏ.ஈ.குணசிங்க, என்ற சிங்களத் தலைவர் சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், அந்த வாக்குரிமையில் ஆண், பெண் என்ற வேறுபாடு காட்டக்கூடாது என்றும் வாதிட்டார்.

மேலும், இலங்கைத் தேசிய காங்கிரஸின் தூதுக் குழுவிற்குத் தலைமை வகித்த டபிள்யூ. பெரேரா சர்வஜன வாக்குரிமை பற்றிக் குறிப்பிடுகையில், இந்த வாக்குரிமை பெறுபவர்கள் ஆகக் குறைந்தது மாதாந்தம் ரூபா ஐம்பதாவது சம்பளமாகப் பெறவேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும் பெண்கள் வாக்குரிமை பெறுவதற்கு25 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும், அவர்கள் கல்வித்தகைமை, மற்றும் சொத்துத் தiகமையுடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

சிங்களக் குழுக்கள் மத்தியில் சர்வஜன வாக்குரிமை சம்பந்தமாக நிறைய வேறுபாடுகள் நிலவின.அதேநேரம், சேர் பொன்னம்பலம் இராமநாதன் சர்வஜன வாக்குரிமை வழங்கப்படுவதால் தமிழர்களுக்கும், ஏனைய சிறுபான்மை இனத்தவர்களுக்கும் எதிர்காலத்தில் வரப்போகும் பிரச்சினைகள் பற்றி முன்கூட்டியே அவரால் உணரக்கூடியதாக இருந்தது.

சர்வஜன வாக்கெடுப்பு இந்த நாட்டிலே வரும்காலத்தில் பெரும்பான்மையின மக்களின் ஆட்சியை உருவாக்க வழிவகுக்கும்.

மேலும், எதிர்காலத்தில் தமிழர்களின் அடிப்படை மனித உரிமைகளையே பாதிக்கும் என்று சேர். பொன்னம் பலம் இராமநாதன் கூறினார்.

‘இந்த சர்வஜன வாக்கெடுப்பு ஏதாவது புனித தன்மையுள்ளதா? இதை யாராவது தலைவர்களிடம் மக்கள் கேட்டார்களா? சர்வஜன வாக்கெடுப்பை வழங்குவதற்கு இந்த நாடு பக்குவம் அடைந்துவிட்டது என இந்த ஆணையாளர்கள் கருது கின்றார்களா?’

‘அவர்கள் மனிதர்களை ஆடு, மாடுகளைப் போல எண்ணுகின்றார்கள். ஐம்பது மனிதர்கள் இந்தப் பக்கம், நாற்பது மனிதர்கள் அந்தப்பக்கம் என்றும், இன்றேல் அறுபது மனிதர்கள் இந்தப் பக்கம், நாற்பது மனிதர்கள் அந்தப் பக்கம் என்றும் கூறுகின்றார்கள். ஆணையாளர்கள் உருவாக்க முன்னெடுத்துள்ள இந்த அரசியல் யாப்பு இந்த நாட்டு மக்களின் தேவைக்குப் பொருத்தமற்றது’ என சேர். பொன்னம்பலம் இராமநாதன் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், ஆணையாளர்கள் சேர். பொன்னம்பலம் இராமநாதன் காலத்தின் தேவையைப் புரிந்து கொள்ளாமல் பேசுகின்றார் எனக் கூறினார்கள்.இதைக்கேட்டு ஆத்திரமடைந்து ‘பன்றிக்கு முன்னால் முத்தை வைப்பது அர்த்தமற்ற செயல்’ என்று கூறினார். மேலும் அவர் விரக்தியுடன்; பேசுகின்ற பொழுது ‘யார் இந்த ஆணையாளர்கள்? எமது நாட்டிற்கு எது நல்லது? எது கெட்டது என்று தீர்மானிப்பதற்கு? இவ்வாறான பொறுப்பு மிக்க ஆனால், கடுமையான செயல்களைச் செய்ய இவர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது?

இந்த நாட்டிலே நிலவுகின்ற பொருளாதார, சமூக நிலைமைகளைத் தெரியும் ஆற்றலும், அறிவும் இவர்களுக்கு உண்டா? அவர்கள் செய்ய முன்வந்திருக்கும் கடமையும், புனிதத்தன்மையும் அவர்களுக்குத் தெரியுமா?’ என்று எல்லாம் கேள்விகள் எழுப்பினார்.
ஆனால், தமிழர்களும் ஏனைய சிறுபான்மையின மக்களும் மிகவும் எச்சரிக்கையுடன் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்புவேண்டும் என கோரினார்கள். கண்டியச் சிங்களவர்கள் தமக்கு சுய ஆட்சி வேண்டும் எனக் கூறினார்கள்.

டொனமூர் ஆணைக்குழுவினர் 1928 ஆம் ஆண்டு யூன் 26 ஆம் திகதி தங்கள் சிபாரிசுகள் அடங்கிய அறிக்கையை கைச்சாத்திட்டார்கள். அந்த ஆணைக் குழுவினர் தமிழர்தூதுக் குழுவினர் வற்புறுத்திய வழங்கிய தமிழர்களுக்கும்இ சிறுபான்மையினத்தவர்களுக்கும் தனியாக தேர்தல் தொகுதி வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கைக்கு மதிப்பளிக்கத் தவறி விட்டார்கள்.

ஆணைக்குழுவினர் ஓரளவு பொறுப்புள்ள அரசாங்கத்தை நாட்டிலிருந்த தலைவர்களுக்கு வழங்க முன்வந்தார்கள். அவர்கள் நாடாளுமன்ற நிர்வாக முறைமையை அடியொற்றி சட்டசபை ஒன்றை உருவாக்க சிபாரிசு செய்தார்கள். அந்த சட்டசபையில் ஏழு செயலதிகாரம் கொண்ட குழுக்கள் இருக்கும். சகல சட்டசபை உறுப்பினர்கள் இந்த ஏழு குழுக்களிலும் அங்கம் வகிப்பார்கள். அந்த ஒவ்வொரு செயற்குழுவும் அரச இலாகா ஒவொன்றிற்கும் பொறுப்பாக இருப்பார்கள்.

இவ்வாறு தெரிவு செய்யப்படும் ஒவ்வொரு குழுக்களின் தலைவர்களும், அமைச்சர்கள் என்று அழைக்கப்படுவர். அதேநேரம், மூன்று முக்கிய பொறுப்புக்கள் அரச உத்தியோகத்தர்களிடம் வழங்கப்படும் என அந்த ஆணையாளர்களின் சிபாரிசில் கூறப்பட்டது. அவையாவன, பிரதம செயலாளர், நிதிச் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர். இவர்கள் மூவரும் மந்திரிசபையில் அடங்குவர்.
இந்த டொனமூர் ஆணைக் குழுவின் அறிக்கை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் யூலை 1928 ஆம் ஆண்டு, சமர்ப்பிக்கப்பட்டது.1928 ஆம் ஆண்டு யூலை 18 ஆம் திகதி, நாடாளுமன்றில் ஏற்றுக் கொள்ளப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை வெளியிடப்பட்டதை அடுத்து இலங்கையில் சட்டநிர்வாக சபையில் விவாதங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

முதன்முதலில் 1928 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 27 ஆம் திகதி இந்த ஆணைக்குழு சம்பந்தப்பட்ட அறிக்கையை சட்ட நிர்வாக சபையில் விவாதத்தினை ஈ.டபிள்யூ.பெரேரோ ஆரம்பித்து வைத்தார். எல்லா சிறுபான்மையினத் தலைவர்களும் பிரதேச பிரதிநிதித்துவத்தையும், சர்வஜன வாக்குரிமையையும் எதிர்த்து கண்டனத்தைத் தெரிவித்தார்கள்.

டொனமூர் ஆணைக்குழுவில் சிபாரிசு செய்த இனரீதியான பிரதிநிதித்துவத்தை இரத்துச் செய்யவேண்டும் என சேர். பொன்னம்பலம் இராமநாதன் ஒரு பிரேரனையைக் கொண்டு வந்தார். அந்தப் பிரேரனையை எச்.எம்.மாக்கான் மார்க்கர் வழிமொழிந்தார்.

அதே நேரத்தில் அந்தப் பிரேரணைக்கு ஏ.கனகரத்தினம் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தார். தற்சமயம் அமுலிலுள்ள விகிதாசார முறையில் சிங்களவர் மற்றும் சிறுபான்மையினத்தின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என அந்தத் திருத்தத்தில் குறிப்பிட்டார்.

ஒரு சிங்கள உறுப்பினரைத் தவிர மற்றைய எல்லா சிங்கள உறுப்பினர்களும் சேர்.பொன்னம்பலம் இராமநாதன் கொண்டு வந்த பிரேரணைக்கு எதிராக வாக்களித்தார்கள்.மேலும், சிங்கள மக்களின் நலனை பிரதிநிதித்துவம் செய்த இலங்கை தேசிய காங்கிரஸ் மலைநாட்டில் வாழும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை வழங்குவதை எதிர்த்தார்கள். இவ்வாறு வாக்குரிமை வழங்கப்படும் மலைநாட்டு தோட்டத் தொழிலாளர்கள், அவர்கள் நாடான இந்தியாவிலேயே வாக்களிக்கும் உரிமை இல்லை என டி.எஸ்.சேனநாயக்க சுட்டிக் காட்டினார்.

தற்சமயம் எழுலட்சம் இந்திய தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் உள்ளனர். இந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டால், அநேகமாக எல்லா பகுதிகளிலும் இந்த இந்திய தமிழ்த் தோட்ட தொழிலாளர்களே தெரிவு செய்யப்படுவர். எனவே இந்த நாட்டில் வாழும் பழங்குடியினருக்குச் சட்டசபை உறுப்பினர் பதவி கிடைப்பது அரிதாகிவிடும் என்று டி. எஸ். சேனநாயக்க குறிப்பிட்டார்.

அப்பொழுது ரீ.பி.ஜாயா உட்பட, சிறுபான்மையின தலைவர்கள் இந்திய தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டுமென்று வாதாடினார்கள். அவருடைய கோரிக்கையை சட்டநிர்வாக சபையில் அங்கம் வகித்த இந்திய வம்சாவழியின் பிரதிநிதியான நடேசையர், மற்றும் ஏ. மகாதேவா (இவர் பிற்காலத்தில் சேர் பட்டம் பெற்றவர். சேர் பொன்னம்பலம் அருணாச்சலத்தின் மகனுமாவார்.) ஆகியோர் ஆதரித்தார்கள்.

சேர்.பொன்னம்பலம் இராமநாதன், இறுதியாக யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்த் தலைவர்களுக்கு சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் நடந்த கூட்டத்தில் பேசினார். அந்தக் கூட்டத்திற்கு மிகவும் எளிமையான உடையணிந்து வந்திருந்தார். ஒரு சாதாரண வேட்டியும், மேல் சட்டையும் மற்றும் ஒரு சால்வை அணிந்திருந்தார்.

அக் கூட்டத்தில் அவர் வழக்கமாக அணிந்திருக்கும் தலைப்பாகை அணியவில்லை. அவரது தலையில் சிறிய குடும்பியளவிற்கு மயிர் முளைத்திருந்தது. அவரது முகம் வாடியிருந்தது. அந்த வாட்டம் முகத்தில் மட்டுமல்ல அவரது பேச்சிலும் தெளிவாகத் தெரிந்தது.’கனவான்களே உங்களுக்கு முன்னால் மிகவும் ஆபத்தான காலம் உள்ளது’ என்று அவர் உணர்ச்சி பூர்வமாகப் பேசினார்.

அவர் மேலும் பேசுகையில், ‘டொனமூர் ஆணையாளர்கள் ஓர் அரசியல் சாசனத்தை உரு வாக்கியுள்ளனர். அதுவே நாட்டின் அழிவுக்கு காரணமாக இருக்கப் போகிறது. கல்வியறிவு இல்லாத மக்கள் வருங்காலத்தில் இந்த நாட்டின் ஆளுநர்களைத் தெரிவு செய்வார்கள்… என் கண்முன்னேயே பெரிய கும்பல் ஒன்று கிளர்ந்து எழுவதைக் காணமுடிகின்றது… எச்சரிக்கையாக இருங்கள்: எங்களுடைய எதிர்காலம் ஆபத்து நிறைந்ததாகவுள்ளது.’

அவர் சூசகமாக எதிர்காலம் பற்றிக் கூறிய கூற்றுக்கள் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் இருந்தது. அதனையடுத்து கவலை தோய்ந்தவராக அவர் யாழ்ப்பாணத்தை விட்டு அவருடைய கொழும்பு வாசஸ்தலமான ‘சுகஸ்தானிற்கு’ சென்றார்.

அன்று 10 ஆம் திகதி நவம்பர் 1930 ஆம் ஆண்டு அவருக்கு குளிர் கபசுரப் பாதிப்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில் குளிர் கபசுரம் நோயிலிருந்து மீண்டுவிடுவார் போல் இருந்தது. ஆனால் அது அவ்வாறு நடக்கவில்லை. அவருக்கு வைத்தியம் செய்து வந்த மருத்துவர்கள் சேர்.பொன்னம்பலம் இராமநாதன் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் கூறினார்கள்.

இராமநாதனுக்கும் தனது நிலைபற்றி தெரிந்ததோ என்னமோ? அவர் பத்து நாட்களாக எவ்விதமான பேச்சுவார்த்தைகளுமின்றி பத்மாசன யோகா நிலையில் அமர்ந்திருந்தார். அநேகமான நேரங்களில் அவர் கண்களை மூடிக் கொண்டே இருந்தார். ஒரு யோகியைப் போல தனது வாழ்வை முவுக்குக் கொண்டு வர நினைத்தார். அவர் இறுதி நாள் வரை நினைவாற்றலுடனே இருந்தார்.

அவரது இறுதி நாள் அன்று, காலையில் அவருக்கு வைத்தியம் செய்துவந்த பிரபலமான சத்திரசிகிச்சை நிபுணரான டாக்டர் ஜே.சீ.போல் அவரைப் பார்த்து, ‘எப்படி இருக்கிறீர்கள் ஐயா?’ எனக்கேட்டார். வயது முதிர்ந்த நிலையிலிருந்த சேர். பொன்னம்பலம் இராமநாதனிடமிருந்து எந்த விதமான பதிலும் இல்லை. அவர் ஒரு வார்த்தையும் பேசவில்லை.

‘ஐயா உங்கள் நாக்கை நீட்டுங்கள்,’ என்று வைத்தியர் போல், கேட்டுக் கொண்டார். அந்த வேண்டுகோளுக்கு நோய்வுற்றிருந்த இராமநாதன் அவர்கள் இசைந்து நாக்கை நீட்டினார்.

சேர். பொன்னம்பலம் இராமநாதன் நோயிற்றிருக்கின்றார் என்ற செய்தி உலகெங்கும் காட்டுத்தீ போல் பரவிற்று. பல நாட்டிலிருந்தும் மக்கள் அவரது கொழும்பு வாசஸ்தலமான ‘சுகஸ்தானுக்குப்’ படையெடுத்தனர்.

அவரைப் பார்க்கவந்தவர்களின் முகத்தில் ஏக்கத்தையும், கவலையையும் பார்க்கக் கூடியதாகவிருந்தது.இறுதியாக, மாலை 8மணியளவில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக வைத்தியர்கள், கூறினார்கள். இச்செய்தி வந்திருந்த அனைவரிடமும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அந்தக் கூற்றிற்கு மாறாக 30ஆம் திகதி நவம்பர் 1930ஆம் ஆண்டு அதிகாலையில் அவரது உடல் விறுவிறுவென சீர்குலைந்து அவரது ஆவி பிரிந்தது. அவரது ஆவிபிரியும் அந்தத்தருணத்தில், திருவாட்டி இராமநாதன், இராமநாதனுடையபிள்ளைகள், பேரப்பிள்ளைகள், மருமக்கள்களும் அவரது கட்டிலைச் சுற்றி நின்றார்கள்.

அவர் நோய் வாய்ப்பட்டதை அடுத்து, அவர் இருந்ததிலும் பார்க்க சுகஸ்தானில் வசதியாக ஓர் அறைக்கு அவரை மாற்ற வீட்டார் முயற்சி செய்தனர். ஆனால் அவரது நூலகத்தைப் பார்க்கக் கூடியதாகவிருந்த அவரது அறையிலேயே கடைசிவரையிலும் இருந்து காலமானார். அமைதியான முறையில் கௌரவமான சூழலில் அவரது ஆவி அவரை விட்டுப் பிரிந்தது.
ஒரு மகிமை நிறைந்த பெருமகனார் இந்த உலகத்தை விட்டு வெளியேறிவிட்டார்.

அவருடைய இறப்பின் மூலம் எமது நாட்டின் சரித்திரத்தில் சிறப்பு மிக்க வருடங்களின் முடிவுக்கு வந்தன. அன்று 1879 ஆம் ஆண்டு, அவர் எவ்வாறு பொதுவாழ்க்கையை ஆரம்பித்தாரோ, அதே போல அவரது மறைவும் நிகழ்ந்தது. மக்களுக்காக பூரணமாக வாழ்ந்த ஒரு பெருமகனின் பிரிவு, அதன் வலியையும், வேதனையையும் எழுத்துக்களால் வர்ணித்து விட முடியாது.

30 ஆம் திகதி நவம்பர் 1930 ஆம் ஆண்டு, ஒரு தேசிய துக்க தினமாக அன்றைய தினத்தை அரசாங்கம் அறிவித்து, பொதுவிடுமுறை தினமாக பிரகடனம் செய்தது. எல்லா அரச காரியாலயங்கள், பாடசாலை, வங்கிகள், வர்த்தக நிலையங்கள், நீதிமன்றங்கள், சட்ட நிர்வாக சபை ஆகியன மூடப்பட்டு இலங்கையின் தேசிய பிதாமகனான சேர். பொன்னம்பலம் இராமநாதனின் பிரிவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

சட்ட நிர்வாக சபை சபா மண்டபத்தில் அவரது பூதவுடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மக்கள் கவலைகளுடன் காலம் சென்ற தலைவரின் பூதவுடலுக்கு திரள் திரளாக வந்து அஞ்சலிசெலுத்தினார்கள். அவரது பூதவுடல் வைக்கப்பட்டிருந்த நான்கு மூலைகளிலும் பெரிய பித்தளைக் குத்து விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன.

அன்று பிற்பகல் நான்கு மணிக்கு மதச்சடங்குகள் நடைபெற்றன. அவருடைய பூதவுடலுக்கு அபிசேகம் செய்தார்கள். சம்மணக்கால் போட்டிருக்கும் பத்மாசன நிலையில் இருக்குமாறு ஒரு சிறுத்தை தோல் ஆசனத்தில் அவரது பூதவுடலை அமர வைத்திருந்தார்கள்.
அவருடைய உடல்நிலை பாதிப்படைந்திருக்கும் செய்தி யாழ்ப்பாணத்தில் பரவியதும் அங்கு வாழும் மக்கள் சேர். பொன்னம்பலம் இராமநாதன் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று கடவுளிடம் இறைஞ்சி நின்றனர்.அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி யாழ்ப்பாணத்தில் பரவியதை அடுத்து ஏக்கம் கலந்த அமைதி நிலவிற்று. இறுதியில் அவரது உடலை தரிசிக்கவேண்டும் என்று யாழ்ப்பாண மக்கள் ஏங்கினார்கள்.

அந்த துக்ககாலத்தில், இராமநாதன் பெருமகனின் பூதவுடல் யாழ்ப்பாணம் எடுத்துவரப்பட்டு இறுதிக்கிரியைகள் அங்கே நடைபெற்று, இராமநாதன் கல்லூரி வளாகத்தில் சமாதியில் வைக்கப்படும் என்ற செய்தி யாழ்ப்பாண மக்களுக்கு நிம்மதியையும், திருப்தியையும் கொடுத்தது.

சேர்.பொன்னம்பலம் இராமநாதனின் பூதவுடல் அவரது வாசஸ்தலமான ‘சுகஸ்தானிலிருந்து’ கோட்டை இரயில் நிலையத்திற்கு மாலை 4 மணிக்கு எடுத்துவரப்பட்டது. அவரது பூதவுடல் வைக்கப்பட்ட வெள்ளை மோட்டார் வாகனத்தை விவேகானந்த சபையைச் சேர்ந்தவர்களும் பொதுமக்களும் இழுத்துவந்தனர். வார்ட்ஸ் பிளேஸ், யூனியன் பிளேஸ் ஊடாக கோட்டை இரயில் நிலையத்தை பூதவுடல் சென்றடைந்தது. அவரது பூதவுடல் கொழும்பு – யாழ்ப்பாணம் செல்லும் தபால் இரயில் வண்டியில் வைக்கப்பட்டது. அந்த வண்டிக்கு 17 பெட்டி பூட்டப்பட்டு வழமைக்கு மாறாக நீண்ட ஒரு இரயில் வண்டியாக அவரது இறுதிச் சடங்கில் பங்குபற்ற கொழும்பிலிருந்து சென்ற மக்கள் அனைவரையும் ஏற்றிச் சென்றது.

இந்த இறுதிக் கிரியையில் பங்குபற்ற, தேசாதிபதியின் சார்பாக மகா முதலியார் ஜே.பி. ஒபேசேகராவும் சென்றார். அவர் சென்ற ஒரு இரயில் பெட்டியில் இராமநாதனின் பூதவுடல் ஒரு யோகி அமர்ந்திருப்பது போல வைக்கப்பட்டது. அவரது நீண்ட தாடிக்கு கீழே ஒரு உருத்திராட்ச மாலையைக் காணக்கூடியதாக இருந்தது. அவருடைய நெற்றியிலே விபூதி பட்டையாக அணியப்பட்டு, நடுவிலேசந்தனப்பொட்டும்வைக்கப்பட்டிருந்தது.

இரயில் வண்டியில் வந்து கொண்டிருந்த இராமநாதனின் பூதவுடலை வரவேற்பதற்கு யாழ்ப்பாண இரயில் நிலையம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நிறைய மக்கள் இரயில் நிலையத்தில் கூடியிருந்தார்கள். பாடசாலை மாணவ மாணவிகள் வெள்ளை நிற உடைஅணிந்து, வெள்ளைக் கொடிகள் ஏந்தி அணி வகுத்து நின்றனர். இரயில் வண்டி இரயில் நிலையத்தை வந்து நின்றதும்’அரோஹரா’ என்ற கோஷம் வானைப் பிளந்தது.

இரயில் வண்டி தரிப்புக்கு வந்ததும் யாழ்ப்பாண நகரசபைத் தலைவரும் உறுப்பினர்களும் இராமநாதனின் பூதவுடல் இருந்த இரயில் பெட்டிக்கு சென்று, அவரது பூதவுடலுக்கு மாலைகள் அணிவித்தனர்.

அதன் பின்னர் அவரது பூதவுடல் மோட்டார் வாகனத்தில் ஏற்றப்பட்டது. காலையில் ஆரம்பமான இராமநாதனின் இறுதி ஊர்வலம் இராமநாதன் கல்லூரியை வந்தடைய நண்பகலாகி விட்டது. இறுதிச் சடங்குகள் இராமநாதன் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிற்று.
சேர். பரன் ஜெயதிலக, சி. டபிள்யு. டபிள்யு. கன்னங்கரா மற்றும் ஈ.ஆர்.தம்பிமுத்து ஆகியோர் நீர்த்தோர் பெருமையினை விளக்கிப் பேசினார்கள். இறுதிச் சடங்குகளை அவரது இரு மகன்களான திரு. இராஜேந்திரா, திரு.வாமதேவா ஆகியோர் பங்குபற்றி நிறைவேற்றினார்கள்.

இறுதியில், அவரது பூதவுடல் அவரது சமாதியில் இறக்கி மண் தூவிப் புதைக்கப்பட்டது. சமாதிக்குள் அவரது உடலை இறக்கும் போது அங்கிருந்த மக்கள் அனைவரும் அரும்பெரும் தமிழ்மகனின் பிரிவினைத் தாங்காமல் கத்திக் கத்தி கதறி அழுதனர். ‘அரோஹரா’ கோஷம் வானைப் பிளந்தது.

இவ்வாறு தான் ஈழத்திலே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த ஒரு தமிழ் பெருமகனின் வாழ்வு ஆரம்பித்து முடிவுக்கு வந்தது. அவரது புகழ் ஓங்குக! நாமம் வாழ்க!

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
January 2020
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்