வருடல்

கட்டுரை

யாருடன் தமிழர் கூட்டுச்சேர்ந்தாலும் அவர்களுக்கு தீர்வில்லை. தமிழ்த் தேசியம் ஒன்றே அவர்களுக்குப் பலம். – மு. திருநாவுக்கரசு

“ஐ.நா. அறிக்கையின் படி 40,000 பேர், இறந்திருந்தால் 2 இலட்சம் பேர், காயப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி 2 இலட்சம் பேர் காயப்பட்டவில்லை என்றால் 40,000 பேர் இறந்தனர் என்று சொல்வது பொய்யானது” என்று லங்கா சம சமாஜ கட்சித் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

ஒருவர் கொல்லப்பட்டால் ஐவர் காயப்படுவர் என்ற பேராசிரியரின் கதை வாய்ப்பாடு சரியானது. ஆனால் கணிதத்தோடு சேர்ந்து சார்பியல் என்னும் கோட்பாட்டையும் இணைத்துக் கணக்குப் பார்க்க வேண்டும் என்பதை பேராசிரியர் கணக்கில் எடுக்கத் தவறிவிட்டார்.

வெடி குண்டுத் தாக்குதல்களின் போது ஒருவர் மரணமடைந்தால் நான்கு அல்லது ஐந்து பேர் காயமடைந்திருப்பர் என்பது ஒரு பொதுவாக கணக்கு. விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கூறிய சார்பியல் கோட்பாட்டின் படி (Theory of Relativity) ஒருவருக்கு முன்னால் வலப்பக்கம் இருக்கும் அதே பொருள் அவருக்கு நேர் முன்னால் முகங்காட்டி நிற்கும் இன்னொருவருக்கு இடப்பக்கத்தில் இருக்கும். எனவே இடப்பக்கம், வலப்பக்கம் என்பதை இங்கு இடச்சார்பு நிலையே நிர்ணயிக்கிறது.

பூமியின் ஈர்ப்புச் சக்தியானது வழமையான நாட்களைவிட முழுநிலா நாளன்று மாறுபடும். ஒருமுறை விண்ணை நோக்கி ரொக்கெட் (Rocket) ஏவப்பட்ட போது அது இலக்கைத் தாண்டி சென்றுவிட்டது. ரொக்கெட் ஏவப்பட்ட அன்றைய தினம் முழுநிலா நாள் ஆகையால் பூமியின் ஈர்ப்புச் சக்தி குறைந்திருந்த நிலையில் ரொக்கெட்டின் வேகம் அதிகரித்திருந்தது. முழுநிலவு நாள் என்பதை கணக்கில் எடுக்கப்படாதால் ரொக்கெட் ஏவப்பட்டதன் கணக்கு பிசகி இலக்கு பிசகி ரொக்கெட் ஏவப்பட்டமை தோல்வியில் முடிந்தது.

முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது காயப்பட்டவர்களுக்கு வைத்தியம் செய்ய ஏற்பாடுகள் இருக்கவில்லை. மேற்படி பேராசிரியரின் கணிப்பின்படி காயப்பட்டவர்கள் உயிர் தப்புவதற்கு மருந்து, மருத்துவர், மருத்துவமனை, பராமரிப்பாளர்கள் என இவை அனைத்தும் தேவை. ஆனால் அனைத்துவகை மனிதாபிமானங்களுக்கும் முரணாக மருந்து பொருட்கள் தடை செய்யப்பட்டு இருந்ததுடன் குறைந்தளவில் இருந்த மருத்துவமனைகளும் குண்டு வீச்சுக்களுக்கு உள்ளாகின.

இந்நிலையில் மரணத்திற்கு ஏதுவான காயமுள்ளவர்கள் (Fatal Injury) மட்டுமன்றி சிறு காயங்களுக்கு உள்ளானவர்கள் கூட இரத்தப் பெருக்கு மற்றும் மருத்துவ வசதியின்றி இறந்து போயினர் என்பதே உண்மையாகும். அதாவது குண்டுவீச்சிற்கு இலக்காகிய ஏறக்குறைய அனைவரும் இறக்கும் நிலையே முள்ளிவாய்க்காலில் காணப்பட்ட களநிலை யதார்த்தமாகும்.

முதலில் ஐ.நா. செயலாளர் பான்-கீ-முன் நியமித்த நிபுணர்குழு அறிக்கையில் 40,000 பேர் கொல்லப்பட்டனர் என்று இருந்ததற்கு அப்பால் ஐ.நா.வின் உள்ளக விசாரணை அறிக்கையின் படி (Internal Review Report) 70,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக பின்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் களநிலையில் சரியாக விசாரணை செய்யப்பட்டால் இத்தொகை மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது. இப்படி உண்மைக்குப் புறம்பாகவும், இனப்படுகொலைக்கு சார்பாகவும் பேசியிருப்பவர் ஒரு இடதுசாரி என்பது வியப்புக்குரிய விடயமாகும்.

தமிழ் மக்களின் தேசியவாதத்தை கிண்டல் செய்பவர்கள், உரிமைக்காக குரல் எழுப்புவர்களை புறக்கணிப்பு அரசியல்வாதிகள் என்று கூறிவருபவர்கள், சிங்கள முற்போக்கு சக்திகளுடன் சேர்ந்து தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற வேண்டும் என்று கூறுபவர்கள், சிங்களத் தரப்பில் யார் முற்போக்கானவர்கள் என்பதை அடையங்காட்ட வேண்டியது அவசியம். அண்மைக் காலத்தில் இதுபோன்ற கருத்துக்களை பலர் எழுதியும், பேசியும் வருகின்றனர்.

தேசியம் என்பது பாதுகாப்பிற்கான அரணும், உரிமைக்கான கலசமும் ஆகும். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தேசியத்தின் வடிவிலான சமூக கூட்டுப் பலந்தான் அவர்களினது உயிர், உடமை, பண்பாடு, வாழ்கைமுறை, பிரதேசம் என்பனவற்றைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்பு அரணாகும்.

அதாவது “தேசியம் என்பது கூட்டு வாழ்வின் பேரால் பாதுகாப்பிற்கான ஏற்பாடாகவும் இலட்சக்கணக்கான ஆண்டுகால பண்பாட்டுத் தொடர்ச்சியின் ஆத்மாவில் இருந்து ஊற்றெடுக்கின்ற நவீன வளர்ச்சிளைத் தழுவிய ஒரு வாழ்வியல் வடிவமாகும்”.

தேசிய அடையாளத்தின் கீழ் சமூக ஒருமைப்பாடு, அனைவருக்கும் பொதுவான சட்டம் மற்றும் நீதி நெறிகள், சமவாய்ப்பு, சமசந்தர்ப்பம், ஆணுக்கும் பெண்ணிற்கும் இடையேயான சமத்துவம், திருமண உறவு சம்பந்தமான சமத்துவம், கல்வி, தொழில் வாய்ப்பு என்பனவற்றில் ஆண்களுடன் பெண்களுக்கும் சமத்துவம் மற்றும் வாழ்வியல் சமத்துவங்கள் அனைத்தையும் தனிமனித உரிமையில் இருந்து கூட்டுரிமை வரை அனைவருக்குமான பொது நெறிகளை தேசியம் வற்புறுத்துகிறது.

அந்நியநாட்டு ஆதிக்கம், இன மேலாதிக்கம், மன்னராதிக்கம், சர்வாதிகார ஆதிக்கம், குழுநிலை ஆதிக்கம், சாதி ஆதிக்கம், ஆணாதிக்கம் ஆகிய அனைத்து வகை ஆதிக்கங்களையும் கடந்து மக்களை அரசியலில் பங்காளியாக்குவதும், அரசியல் தீர்மானங்களில் பங்காளியாக்குவதும் தேசியத்தின் அடிப்படை ஆத்மாவாகும்.

இந்த வகையில் தேசியத்திற்கு பண்பாடு வடிவமாக அமையும் போது ஜனநாயகம் அதற்கு உயிராக அமைகிறது. பண்பாடு என்பது அவன் வாழும் பிரதேசத்தோடும், சூழலோடும், வரலாற்று தொடர்ச்சிக்கு ஊடாக மிளிரும் ஒரு உன்னத அங்கமாகும். பண்பாட்டையும், ஜனநாயகத்தையும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களென கொண்டதே தேசியமாகும்.

இந்ந வகையில் தேசியம் இல்லாம் வெறுமனே ஒரு சோற்றுப் பிண்டமாக அல்லது ஒரு வெறும் உணவுண்ணியாக மட்டும் வாழ்வது மனித வாழ்வாகாது. மனிதனை பிராணிகளில் இருந்து மேம்பட்டவனாக்குவது அவனது பண்பாட்டு உள்ளடக்கம்தான். அந்தப் பண்பாட்டு உள்ளடக்கத்தைப் பாதுகாத்து வளர்ப்பதும், அதனை ஜனநாயக வழியில் பகிர்ந்து மேம்படுத்துவது என்பதுதான் தேசியமாகும்.

அது பொருளாதாரத்தை பரந்த மக்களின் அதிகாரத்திற்கு உட்படுத்தி தேசிய நலனின் அடிப்படையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது தேசியத்தின் மேலும் ஒரு சிறப்பு அம்சமாகும். பண்பாட்டு நிர்ணயம், பொருளாதார நடைமுறை என்பனவற்றை தீர்மானிப்பதற்கான அரசியல் அதிகாரம் இல்லாமல் தேசியம் வெறும் அபிவிருத்திவாதமாக இருக்க முடியாது. தமக்குப் பொருத்தமான அபிவிருத்தியையும், வளர்ச்சியையும் அந்த மக்கள் தீர்மானிப்பதற்கான அரசியல் அதிகாரமே ஒரு தேசிய வளர்ச்சிக்கான அச்சாணியாகும்.

இவ்வகையில் தேசியம் வரலாற்றில் தனிச்சிறப்பான பாத்திரம் வகிக்கிறது. உலகில் உள்ள அனைத்து அரசுகளும் தேசிய பாதுகாப்புப் பற்றிப் பேசுவது இதனடிப்படையிற்தான். இனப்படுகொலைக்கு உள்ளாகும் தமிழ் மக்களை தேசியவாதம் பேச வேண்டாம் என்று சொல்வது போன்ற எதிரிக்கும் ஓடுக்குமுறைக்கும் துணைபோகும் செயல் வேறொன்றும் இருக்க முடியாது.

இந்தவகையில் தமிழ்த் தேசியம் போற்றப்பட வேண்டியதே தவிர கிண்டல் செய்யப்பட வேண்டியதல்ல. அதேவேளை சிங்கள முற்போக்கு சக்திகளுடன் சேர்ந்து தமிழ் மக்கள் தம் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று கூறும் வெற்று வேட்டுக்களை சற்று ஆராய்வது நல்லது.

1918ஆம் ஆண்டு இலங்கையில் தொழில் கட்சியை ஆரம்பித்த முற்போக்குவாதியான ஏ.ஈ. குணசிங்க என்பவர் இந்திய எதிர்ப்புவாதம், மலையாளி எதிர்ப்புவாதம், தமிழின எதிர்ப்புவாதம் என்பனவற்றை தெளிவாகப் பேசிய ஓர் சிங்கள இனவாதியாகக் காணப்பட்டார்.

இலங்கையில் சோசலிசத்தின் தந்தை என்று வர்ணிக்கப்படுகின்ற பிலிப் குணவர்த்தனவும் அவரது தலைமையிலான புரட்சிகர லங்கா சம சமாஜ கட்சியும் தீவிர தமிழின எதிர்ப்பு இனவாதம் பேசி 1956ஆம் ஆண்டு பண்டாரநாயக்க தலைமையிலான மகாஜன எக்ஸத் பெரமுனவில் ஓர் அங்கமாக செயற்பட்டு தன் இனவாத்திற்கு முத்திரைப் பதித்தது.

டொக்டர் என்.எம்.பெரேரா, டொக்டர் கொல்வின் ஆர் டி சில்வா என்போரைத் தலைவர்களாகக் கொண்ட லங்கா சம சமாஜ கட்சி தமிழ் மொழியின் உரிமைக்காக குரல் கொடுத்து. அதேபோல டொக்டர் டபுள்யூ. விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை கெம்யூனிஸ்ட் கட்சியும் இதே போல தமிழ் மொழிக்கு சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது.

ஆனால் 1966ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து நடாத்திய மே தின ஊர்வலத்தில் தமிழரை இன ரீதியாக இழிவுபடுத்தும் வகையில் “தோசே, மசாலா வடே அப்பிட்ட எப்பா” என்ற கோசத்தை எழுப்பியதன் மூலம் அவை தம்மை தமிழின விரோதக் கட்சிகளாக பறைசாற்றின.

பின்பு லங்கா சம சமாஜ கட்சியில் இருந்து கிளைவிட்டு தமிழ் மக்களின் உரிமைக்காக தீவிரமாக குரல் எழுப்பிய வாசுதேவ நாணயக்கார தலைமையிலான நவ சம சமாஜ கட்சி தீவிர இனவாதக் கட்சியாக மாறி ராஜபக்ச அரசாங்கத்துடன் தோள் கொடுத்து நின்றது.

“மொழி ஒன்றெனில் நாடு இரண்டு, மொழிகள் இரண்டெனில் நாடு ஒன்று” என்று ஒரு கோட்பாட்டுச் சமன்பாட்டை முன்வைத்த கொல்வின் ஆர் டி சில்வாதான் தமிழ் மக்களுக்கு விரோதமான, தமிழ் மக்களுக்கு அரசியலில் பங்கற்ற ஒரு தீவிரவாத அரசியல் யாப்பை 1972ஆம் ஆண்டு உருவாக்கினார். அவரினது வாரிசும், அந்த சம சமாஜயினதும் இன்றைய தலைவர்தான் பேராசிரியர் திஸ்ஸ விதாரண. இவர்களை நம்பி எத்தகைய முற்போக்கு கூட்டுச் சேரல்களை யார் வைக்க முடியும்.

சில வேளை உதிரிகளாக சிங்கள மக்கள் மத்தியில் பலமற்றவர்களாக பேராசிரியர் விக்ரமபாகு கருணரத்த போன்ற சிலர் இருக்கக்கூடும். அந்த சிங்கள மக்கள் மத்தியில் பலம் இல்லாதவர்களுடன் எவ்வாறு கைகோர்க்க முடியும். “ஒடுக்கும் இனத்தின் மத்தியில் கைகொடுக்க ஒரு சக்தி இல்லையென்றால் ஒடுக்கப்படும் இனம் அங்கு யாருடன் கைகோர்க்க முடியும்? என்ற லெனின் கூற்று இங்கு கவனத்திற்குரியது.

மேலும் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்ட ஜே.வி.பி.யினர் இனவாத சிந்தனை கொண்டவர்களாயும், தமிழின எதிர்ப்புவாத உணர்வு கொண்டவர்களாயும், தமது அமைப்பில் தமிழர்களை சேர்க்காது 1971ஆம் ஆண்டு போராட்டம் நடத்தியவர்களாகவும் காணப்படும் போது எந்த சிங்கள இளம் சந்ததியை தமிழ் மக்கள் முற்போக்காளர்களாக அடையாளம் காண்பது?

இவற்றைவிடவும் சுவாரியமான வரலாற்று உண்மைகள் அதிகம் உண்டு. அதாவது 1919ஆம் ஆண்டு இலங்கை தேசிய கொங்கிரசை உருவாக்கி பல்லினங்களையும் இணைத்து அதற்குத் தலைவராக இருந்த சேர்.பொன். அருணாசலம் தமிழ் மக்களின் தனித்துவமான உரிமையுடன் இலங்கையர் என்ற பொது தேசியத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தவர். ஆனால் அவரின் வேண்டுகோள்கள் புறக்கணிக்கப்பட்ட போது அவர் அதிலிருந்து பிரிந்து தமிழர் மகா சபை என்ற புதிய அமைப்பை 1921ஆம் ஆண்டு உருவாக்க நேர்ந்தது.

அப்படியே ஐக்கிய தேசியக் கட்சியில் தமிழர்கள் பலர் இணைந்திருந்ததுடன் அமைச்சர்களாகவும் இருந்தனர். ஆனால்; தனிச் சிங்களச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் 1955ஆம் ஆண்டு ஐதேகவின் கழனி மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டபோது ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தும், ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கதிலிருந்தும் அமைச்சர் குமரசுவாமி உட்பட ஏறக்குறைய தமிழ்த்தலைவர்கள் அனைவரும் வெளியேறினர்.

அதேபோல திரு. என். சண்முகதாசன் தலைமையிலான சீனசார்பு கெம்யூனிஸ்ட் கட்சி இளைஞர் அணித் தலைவராக இருந்த ரோகண விஜயவீர தமிழின எதிர்ப்பு உணர்வோடு தமிழரான திரு. சண்முகதாசன் தலைமை தாங்கும் கட்சியில் இருந்து இளைஞர் அணியைப் பிரித்தெடுத்து ஜே.வி.பி. என்ற தனிச் சிங்கள கட்சியை உருவாக்கினார்.

அதேபோல இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மொஸ்கோ சார்பு) இனவாத நிலைப்பாட்டை எடுத்த போது அதிலிருந்து தமிழரான திரு. வி. பொன்னம்பலம் வெளியேறி “செந்தமிழர் ஆகிடுவோம்” என்ற தமிழ்க் கட்சியை ஆரம்பித்தார். இப்படி இடதுசாரி, வலதுசாரி கட்சிகள் இரண்டிலும் இருந்து தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு இனரீதியில் பிளவுபட்டுப் போனதையே வரலாறு நிரூபித்து நிற்கின்றது.

அத்துடன் இதைவிடவும் முக்கியமான இன்னொரு விடயம் என்னவெனில் சண்முகதாசன் தலைமையிலான கெம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து சிங்களவர்கள் வெளியேறிய நிலையில் இறுதியாக சண்முகதாசன் தனது கட்சியைக் கலைக்க நேர்ந்தது. அவ்வாறு கட்சி கலைக்கப்படும் போது அந்தக் கட்சி செயலகத்திற்கு திறப்புக் கோவையுடன் பொறுப்பாக இருந்த சட்டத்தரணி தியாகராஜா விடுதலைப் புலிகளுடன் இணைந்து கொண்டார்.

அவ்வேளை அக்கட்சியில் இருந்து இமையோன், அரசண்ணா, செங்கதிர் எனப் பலரும் புலிகளில் இணைந்தனர். இன்னொரு பகுதியினர் புளொட்டில் இணைந்தனர். இன்னொரு பகுதியினர் என்.எல்.எப்.ரி. என்ற ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வரலாறு எதனைக் காட்டுகின்றது என்றால் சிங்கள முற்போக்கு சக்திகளுடனோ அல்லது வலதுசாரிகளுடனோ இணைந்து தமிழ் மக்கள் தமக்கான உரிமையை பெறமுடியாது என்பதுதான்.
தற்போதைய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நல்லாட்சி அரசாங்கத்துடன் சேர்ந்து, ஒத்துழைத்து, இணைந்து போய் தமிழ் மக்களுக்கான உரிமைகளைப் பெறலாம் என்று கூறி அதற்கு ஆதரவு அளித்து செயற்பட்டு வருகின்றனர்.

இலங்கை அரசுக்கு சர்வதேச அரங்கிலும், உள்நாட்டு அரங்கிலும் ஏற்பட்டிருந்த போர்க்குற்ற விசாரணை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், தமிழர் மீதான ஒடுக்குமுறைகளும், மறுக்கப்பட்ட நீதியும் போன்ற அனைத்து நெருக்கடிகளையும், தடைகளையும் தாண்டி வெற்றிவாகை சூடுவதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த இரண்டரை ஆண்டுகளாக பயன்படுத்தியுள்ளதே தவிர தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்குவதில் அவர்கள் எத்தகைய கவனமும் செலுத்தவில்லை.

“புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கு காவியுடைகளே தடை” என்று தற்போது பழியை பௌத்த பிக்குமார்களின் தலையில் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா சுமத்தியுள்ளார்.

இலங்கையில் காலங்காலமாக இனவாத பூதம் எதனையும் குழப்பும் என்பது வரலாறு அறிந்த உண்மை. ஆனால் இவற்றையெல்லாம் மீறி புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை இதயசுத்தியுடன் காணும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக கூறிவந்தனர். இக்கூற்றுக்களுக்கு முத்தாய்ப்பு வைத்தாற்போல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான திரு,ஆர்.சம்பந்தன் பின்வருமாறு கூறிவந்தார்.

“நான் ஜனாதிபதி சிறிசேனவை நம்புகிறேன், பிரதமர் ரணில் விக்ரமசிங்காவை நம்புகிறேன், மேடம் சந்திரிகா பண்டாரநாயக்கவை நம்புகிறேன். எல்லா காரியங்களும் நல்லபடி நடைபெறும், அவசரப்பட்டு இதனை யாரும் குழப்பிட வேண்டாம்” என்று கூறினார்.
இனப்பிரச்சனைக்கான தீர்விற்கு எதிராக எழக்கூடிய அனைத்து எதிர்;ப்புக்களையும் எதிர்கொண்டு அவற்றைத் தாண்டி மேற்படி மூவரும் பிரச்சனைக்குத் தீர்வு காண்பர். என்ற உடன்பாடு தமக்கிடையில் உண்டு என்ற வகையிற்தான் சம்பந்தன் பேசிவந்தார்.

ஆனால் இப்போது இனவாத பூதங்களைக் காரணங்காட்டி அவற்றில் இருந்து அவர்கள் ஒதுங்கும் வகையில் அரசியல் தீர்வு அர்த்தமற்றதாகப் போய்விட்டது. இது தொடர்பாக ஆங்கிலப் பத்திரிகையாளரும், ளுயவரசனயல சுநஎநைற பத்திரிகை ஆசிரியராகவும் இருந்த சிங்கள பௌத்த இனத்தவரான திரு.காமினி நவரத்தன தனிப்பட்ட உரையாடலின் போது என்னிடம் தெரிவித்திருந்த தகவலை இங்கு குறிப்பிடுவது பொருந்தும்.

1965ஆம் ஆண்டு டட்லி-செல்வா ஒப்பந்தத்தின் கீழ் ஓர் ஆண்டிற்குள் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் அமைக்கப்படுவதாக ஒத்துக்கொள்ளப்பட்டு தமிழரசுக் கட்சி தேசிய அரசாங்கத்தில் பங்கெடுத்துக் கொண்டது. ஆனால் இரண்டு வருடங்களாகியும் அத்தகைய முயற்சியில் ஆட்சியாளர்கள் ஈடுபடவில்லை. இந்நிலையில் தந்தை செல்வா அரசாங்கத்திற்கு உள்ளிருந்து நெருக்கடி கொடுக்கத் தொடங்கினார்.

இந்நிலையில் அன்றைய அரசாங்கத்தில் முக்கிய பாத்திரம் வகித்த அமைச்சர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன டெய்லி நியூஸ் பத்திரிகையின் ஒரு முக்கிய பத்திரிகையாளரை அழைத்து மாவட்ட அபிவிருத்திச் சபைகள் அமைப்பதற்கு எதிராக செய்திகளைப் பிரசுரிக்குமாறும், ஆசிரியர் தலையங்கம் தீட்டுமாறும் கேட்டுக் கொண்டார்.

அதன்படி செய்திகளும், ஆசிரியர் தலையங்கங்களும் பிரசுரமாயின. அவற்றையெல்லாம் செல்வநாயகத்திடம் ஜெயவர்த்தன காட்டி மாவட்ட அபிவிருத்திச் சபைகள் அமைக்கும் விவகாரத்தை ஒத்திபோட கோரினார்.

இந்நிலையில் ஒப்புக்கொண்டபடி அரசாங்கம் அதற்கான மசோதாவை சமர்ப்பிக்காமல் தமிழரசுக் கட்சியை அம்மசோதாவை சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டது. அதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இறுதியில் அரசாங்கத்தின் ஆதரவற்ற நிலையில் அது ஒரு மசோதாவாக அன்றி வெள்ளை அறிக்கை நிலையில் விவாதிக்கப்பட்டு கைவிடப்பட்டது.

இப்படி வாக்குறுதிகளை அளித்து தம் ஆட்சியை உருவாக்குவது, பின்பு இனவாத பூதங்களைக் கிளறிவிட்டு நல்லபிள்ளைக்கு நாடகமாடி தாம் தப்பித்தவாறு இனவாத பூதங்களில் பழியைப் போட்டுவிட்டு தமிழினத்தின் தலையில் மண்ணைக் கொட்டிவிடுவார்கள். இதுதான் இப்போது பௌத்த பீடங்களைக் கிளறிவிட்டு நல்லாட்சி அரசாங்கத்தினார் ஆடும் சுவாரசியமான காட்சியாகும்.

இனவாத பூதங்களுக்கு எதிராக அவர்களைக் கட்டுப்படுத்தி அரசியல் தீர்வு காண்பேன் என்று கூறிய ஆட்சியாளர்களான சிங்கங்களுடன்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கூட்டு உடன்பாடு உண்டு. ஆனால் பூதங்களை சிங்கங்களே அவிழ்த்துவிட்டுவிட்டு பூதங்களைக் காட்டி சிங்கங்கள் ஒதுங்கி நிற்கும் நாடகம் மேடையில் அழகாய் காட்சியளிக்கிறது.

இந்நிலையில் “புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கு காவியுடைகளே தடை” என்று பௌத்த பிக்குக்களின் மீது பழிபோடுவதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அதற்குப் பொறுப்பான ஆட்சியாளர்களை பாதுகாக்கிறார்களோ என்ற கேள்வியே எழுகிறது.

இங்கு தமிழ்த் தேசியத்தை கிண்டல் செய்பவர்களும், முற்போக்கு சக்திகளுடன் இணைய வேண்டும் என்று கூறுபவர்களும், தமிழர்கள் இனப் புறக்கணிப்பு அரசியலை நடத்துகிறார்கள் என்று கூறுபவர்களும் மேற்படி அனைத்து வரலாற்று நடைமுறைகளையும் கருத்தில் கொள்வது நல்லது.

இவ்விடத்தில் சிங்கள இனத்தைச் சேர்ந்த ஆங்கிப் பத்திரிகையாளரான தாசி வித்தாச்சி என்பவர் 1958ஆம் ஆண்டு இனக்கலவரம் பற்றி எழுதிய நூலின் கடைசிவரி பின்வரும் வினாவோடு முடிகிறது.

“நாங்கள் இரண்டாகப் பிரிந்து செல்லும் நிலைக்கு வந்துவிட்டோமா?
சிந்திக்கும் திறன் உள்ள அநேகரும் ஆம் என்று நம்புகின்றனர்.”

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
January 2020
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்