வருடல்

செய்திகள்

ஒற்றையாட்சி முறைமை நீடிக்கும் வரை சிறிலங்கா இராணுவத்தை வெளியேற்ற இயலாது: சி.வி.விக்னேஸ்வரன்

ஒற்றையாட்சி முறைமை நீடிக்கும் வரை எங்களால் சிறிலங்கா இராணுவத்தை வெளியேற்ற இயலாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Huffington post என்ற அனைத்துலக ஊடகத்துக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

வடமாகாண முதலமைச்சருடனான நேர்காணல் வருமாறு:

கேள்வி: மைத்திரிபால சிறிசேன மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்காவின் அதிபராகப் பதவியேற்றார். இந்நிலையில் வடமாகாணத்தில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைச் சவால்கள் எவை?

பதில்: முன்னர் நிலவிய சூழல் தற்போதில்லை என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. பரந்துபட்டளவில் நோக்கில் ஜனநாயகம் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனாலும் எமது எதிர்பார்ப்புக்கள் இன்னமும் பூர்த்திசெய்யப்படவில்லை. சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுற்று ஒன்பது ஆண்டுகள் கடந்த போதிலும் கூட தற்போதும் 60,000 ஏக்கருக்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரச காணிகள் சிறிலங்கா இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. நில உரிமையாளர்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்வதற்காகக் காத்திருக்கும் அதேவேளையில் இவர்களின் நிலங்களில் சிறிலங்கா இராணுவத்தினர் பயிர்ச்செய்கைகளிலும் அறுவடைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

சிறிலங்கா அரசிற்குச் சொந்தமான பெரும்பாலான நிலங்கள் காடுகளாகும். இங்குள்ள பெறுமதி மிக்க மரங்கள் வெட்டப்பட்டு பிற தேவைகளுக்காக எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த மரங்கள் யாரால் வெட்டப்படுகின்றன என்பது எங்களுக்குத் தெரியாது. இவ்வாறு காடுகள் அழிக்கப்படுவதால் யானைகள் தமது பாரம்பரிய வாழிடங்களை விட்டு வெளியேறி பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளில் நுழைவதுடன் அங்குள்ள பயிர்களையும் ஏனைய பொருட்களையும் சேதமாக்குகின்றன.

வன்னிப் பிரதேசத்தில் வாழும் இளம்பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்கள் இராணுவத்தினரின் அச்சுறுத்தல்களுக்கு இலக்காகியுள்ளனர். இவர்கள் சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக இவர்களால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளை சிறிலங்கா காவற்துறையினர் ஏற்கமறுக்கின்றனர்.

பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த எமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி இடங்களில் தென்பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கும் நிலை காணப்படுகிறது. இதற்கு சிறிலங்கா இராணுவத்தினரும் தமது பாதுகாப்பை வழங்குவதால் எமது மீனவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கின்றனர். வடமாகாணத்தில் சட்டரீதியற்ற முறையில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் தென் பகுதி மீனவர்கள் தங்குவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு பகுதியில் நிரந்தர தங்ககங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான எமது சுற்றுலாப்பயண மையங்கள் சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவர்கள் பல்வேறு விடுதிகளை நடத்தி வருகின்றனர். இந்த இடங்களிலும் மற்றும் இவற்றைச் சூழவுள்ள இடங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன. இதன்மூலம் தற்போது சிங்களத்தில் பத்துன என பெயரிடப்பட்டுள்ள தமிழர்களின் வாழ்விடமான மாதகல் போன்ற இடங்கள் சிங்களவர்களுக்குச் சொந்தமான பூர்வீக நிலங்கள் என பொய்யான பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது.

அனைத்துப் பெயர்ப் பலகைகள் மற்றும் அறிவித்தல் பலகைகள் போன்றன சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் வடக்கு கிழக்கானது சிங்களவர்களுக்குச் சொந்தமான நிலப்பிரதேசம் என சிறிலங்கா இராணுவத்தினர் உரிமைகோர முயல்கின்றனர். சிங்களவர்கள் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களை ஒருபோதும் பெரிய எண்ணிக்கையில் ஆக்கிரமிக்கவில்லை. தற்போது வடக்கு கிழக்கில் உள்ள பௌத்த எச்சங்கள் தமிழ் பௌத்தர்களால் கைவிடப்பட்டவையாகும்.

எமது மக்களின் வர்த்தக நடவடிக்கைகள் சிறிலங்கா இராணுவத்தினரின் உறவுகளால் நடத்தப்படுகின்றன. வவுனியா தொடக்கம் சாவகச்சேரி வரையிலான ஏ-09 நெடுஞ்சாலையில் பெருமளவான சிங்களக் கடைகளைக் காணமுடியும்.

பிள்ளைகளுக்கான முன்பள்ளிகளை நடத்துவதற்காக இளம் தமிழ்ப் பெண்களை சிறிலங்காப் படையினர் அதிக சம்பளத்தில் நியமித்துள்ளனர். இவ்வாறு இணைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சிறிலங்கா இராணுவத்தினரால் இராணுவப் பயிற்சிகள் மற்றும் உடற்பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் சீருடைகளும் வழங்கப்பட்டுள்ளன. சிறிலங்கா இராணுவத்தால் பயிற்சி வழங்கப்பட்ட இத்தமிழ்ப் பெண்கள் முன்பள்ளிகளில் கல்வி கற்பிப்பதற்குப் பொருத்தமானவர்களா என மக்கள் வினவுகின்றனர். முன்பள்ளிக் கல்வி என்பது எமது கல்வித் திணைக்களத்தின் கீழுள்ள ஒரு அலகாகும்.

சிறிலங்கா இராணுவத்தினர் எமது உள்விவகாரங்களின் தலையீடு செய்ய முடியாது. ஆனால் இவர்கள் எமது உள்விவகாரங்கள் தலையீடு செய்கின்ற போதிலும் அவர்களை யார் கேள்வி கேட்பது? எமது தொடர்பாடல்கள் எப்போதும் புறக்கணிக்கப்படுகின்றன. நாங்கள் நீதிமன்றம் சென்றாலும் கூட, பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக்காட்டி சிறிலங்கா இராணுவத்திற்குச் சார்பாகவே தீர்ப்பு வழங்கப்படும்.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தளவில் நிர்வாகமானது மூன்று வெவ்வேறு பிரிவினரால் நடத்தப்படுகிறது. அதாவது வடமாகாண ஆளுநர், மாவட்டச் செயலகங்கள் மற்றும் அவற்றின் அதிகாரிகள், இறுதியாக மக்களால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட எங்களால் என மூன்று வெவ்வேறு நிர்வாக அலகுகள் வடமாகாணத்தில் நடைமுறையிலுள்ளன.

வடமாகாணத்தில் திட்டங்களை உருவாக்குவதற்கும் அமுல்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் தொடர்பில் எம்மீது நம்பிக்கை கொள்வதில்லை. அவர்களால் தெரிவு செய்யப்பட்ட பின்னர் இத்திட்டங்கள் தொடர்பாக எமக்கு அறிவிக்கப்படும். அவர்கள் தமது பணிகளை நிறைவேற்றுதற்காக எமது அதிகாரிகளைப் பயன்படுத்துகிறார். ஆனால் இத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கான திறனை நாங்கள் கொண்டிருக்கவில்லை என அவர்கள் கதைவிடுகிறார்கள்.

அண்மையில், எனது அலுலகத்திற்கு அதிபரால் விருதுகள் வழங்கப்பட்டன. அனைத்து மத்திய அமைச்சர்கள் மற்றும் திணைக்களங்களின் அனைத்து அமைச்சுக்களை உள்ளடக்கிய 800 வரையான அலுவலகங்களில் எனது அலுவலகத்திற்கே சிறிலங்கா அதிபரால் முதலாவது விருது வழங்கப்பட்டது. எம்மால் எதனையும் செய்ய முடியாது அதற்கான ஆளுமை எமக்கில்லை என அதிகாரம் மிக்க சிலரால் தொடர்ந்தும் குற்றம் சுமத்தப்படுகின்றது.

நாங்கள் எமக்கான திட்டங்களை அமுல்படுத்தாமையால் எமக்கென ஒதுக்கப்பட்ட நிதி மத்திய அரசாங்கத்தால் திருப்பி எடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாங்கள் எமக்கான கடப்பாடுகளை நிறைவேற்றிய நிலையில் 31 டிசம்பர் 2017 வரையான கடந்த ஆண்டில் எம்மால் முன்வைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்திற்கு அமைவாக 300 மில்லியன் சிறிலங்கா ரூபாக்களை சிறிலங்கா மத்திய அரசாங்கம் எமக்குத் தரவேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். எமது ஒப்பந்தகாரர்கள் தமது பணிகளைச் செய்து முடித்த நிலையில் இந்த நிதியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய நிறுவனங்களிடம் சிறிலங்கா அரசாங்கத்தால் வாக்களித்ததற்கு அமைவாக இன்னமும் இந்த நாட்டிலிருந்து பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவில்லை. இச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பல சந்தேகநபர்கள் எவ்வித வழக்குகளுமின்றி தொடர்ந்தும் சிறைகளில் வாடுகின்றனர். இவர்கள் தொடர்பில் நீதி எட்டுமாறு நாங்கள் சிறிலங்கா அதிபரிடமும் ஏனைய அதிகாரிகளிடமும் பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும் எமது கோரிக்கைகள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்று வீணாகிவிட்டன.

சிறிலங்கா இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட பலருக்கு என்ன நடந்தது என்பதை அவர்களின் அன்புக்குரியவர்கள் இன்றுவரை அறியமுடியாத நிலையிலுள்ளனர். அனைத்துலகச் சட்டத்தின் படி கைதுசெய்யப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை சிறிலங்கா இராணுவத்தினர் விளக்க வேண்டும்.

தமிழ் பேசும் காவற்துறையினரை இணைத்துக் கொள்வதாக அறிவித்தல் விடுத்த போதிலும் இது செயற்படுத்தப்படவில்லை. வடக்கு கிழக்கில் கடமையில் ஈடுபடும் சிறிலங்கா காவற்துறையினரில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் சிங்கள மொழி பேசுபவர்களாவர். 95 சதவீதத்திற்கும் அதிகமாக தமிழ் பேசும் மாகாணத்தில் சிங்கள மொழி பேசும் காவற்துறையினரே முறைப்பாடுகளைப் பதிவு செய்கின்றனர். முறைப்பாடுகளை தமிழ் பேசும் காவற்துறையினரிடம் வழங்குவதற்கு பல மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. இவ்வாறு பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன.

கேள்வி: எதிர்காலத்திலும் வட மாகாணமானது இராணுவமயப்படுத்தப்பட்டிருக்குமா? இந்த விடயத்தில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை என்பது தொடர்பாக நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா?

பதில்: எப்போதும் வடமாகாணத்தில் இராணுவத்தை நிலைநிறுத்தி வைத்திருப்பதே நோக்கமாகும். இதற்காக இராணுவத்தினர் பொதுமக்களுக்கு உதவுவதில் ஈடுபடுகின்றனர். அதாவது வீடுகள் மற்றும் மலசலகூடங்களைக் கட்டிக்கொடுத்தல் போன்ற செயற்பாடுகளின் மூலம் மக்களின் மனதைக் கவருவதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா இராணுவம் முன்னெடுத்து வருகிறது. இதன்மூலம் தொடர்ந்தும் வடமாகாணத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகளில் இராணுவத்தினர் ஈடுபடுகின்றனர்.

எமது மக்களைக் கொன்றொழித்த, பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய, தமிழ் மக்களின் பொருட்களைச் சூறையாடிய அதே இராணுவத்தினர் தற்போது புதய முகம் ஒன்றுடன் வந்துள்ளனர் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இத்திட்டத்தை உருவாக்கியமைக்காக தற்போதைய இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்கவை நான் வாழ்த்த வேண்டும். எங்களால் எமது மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்கான போதியளவு நிதி வளத்தைக் கொண்டிராமையால் இவர்களுக்கு சிறிலங்கா இராணுவத்தால் வழங்கப்படும் வீட்டுத் திட்டங்கள் மற்றும் ஏனைய திட்டங்களை நாம் மறுக்கமாட்டோம் என்பதை இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க நன்கறிந்துள்ளார்.

ஆகவே ஒற்றையாட்சி முறைமை நீடிக்கும் வரை எங்களால் சிறிலங்கா இராணுவத்தை வெளியேற்ற இயலாது. எமக்கான சமஸ்டி நிர்வாக அலகைக் கொண்ட அரசியலமைப்பை உருவாக்குவதைத் தவிர்ப்பதற்கான பல்வேறு வழிகளை சிறிலங்கா அரசாங்கம் கண்டுபிடித்து வருகிறது. எமக்கான பாதுகாப்பு மற்றும் நலன்களை எமக்கு வழங்கக்கூடிய சமஸ்டி நிர்வாக முறைமை கொண்டுவரப்படாவிட்டால், சிறிலங்கா இராணுவத்தினர் தொடர்ந்தும் எமது பிரதேசங்களை ஆக்கிரமித்துக் கொண்டேயிருப்பார்கள்.

கேள்வி: நம்பகமான மற்றும் முழுமையான இடைக்கால நீதித் திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் அக்கறையற்று இருப்பது போல் தெரிகிறது. இது தொடர்பில் தங்களின் கருத்து என்ன?

பதில்: இந்த நாட்டில் வாழும் அனைத்து சிறுபான்மை இனத்தவர்களையும் கணவர் போன்று மிகவும் கண்ணும் கருத்துமாகப் பார்ப்பதாக சிறிலங்கா சுதந்திரமடையும் போது பிரித்தானியாவிடம் தெரிவித்திருந்தது. ஆனால் இக்கருத்திற்கு முரணாக சிறிலங்கா செயற்படுவதன் மூலம் பிரித்தானியாவையும் சிலோனிலுள்ள சிறுபான்மையினரையும் முட்டாளாக்கியுள்ளதை சிறிலங்கா அரசாங்கம் கவனத்திற் கொள்ளவேண்டும். பிரித்தானியா இந்த நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் சிறிலங்கா ஆட்சியாளர்கள் அனைத்து அதிகாரங்களையும் தம்வசப்படுத்தியதுடன் தமது உண்மையான முகம் என்ன என்பதையும் காண்பிக்கத் தொடங்கினர்.

இடைக்கால நீதிப் பொறிமுறையானது அதிகாரப் பரவலாக்கல் மற்றும் குற்றவாளிகளுக்கான தண்டனை போன்றவற்றை உள்ளடக்குகிறது. ஆனால் சிறிலங்கா அரசாங்கமானது தன்வசமுள்ள அதிகாரங்களை ஏனைய இனத்தவர்களுடன் குறிப்பாக தமிழ் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. அத்துடன் சித்திரவதை, பாலியல் வன்புணர்வு, கொள்ளையடித்தல், கொடூரத் தாக்குதல்கள் போன்ற போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் விரும்பவில்லை. பதிலாக இவர்களைக் கதாநாயகர்கள் என அரசாங்கம் புகழ்கின்றது.

இவ்வாறானதொரு அரசாங்கம் இடைக்கால நீதிப்பொறிமுறையை அமுலாக்குவது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தும் என தாங்கள் கருதுகிறீர்களா? அவர்கள் கதை பேசுவதில் மட்டும் வல்லவர்கள். இவர்கள் அனைத்துலக சமூகத்திடம் வாக்குறுதிகளை வழங்குவதன் மூலம் தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் முட்டாளாக்குகின்றனர்.

கேள்வி: சிறிசேன அரசாங்கத்துடனான ஏனைய நாடுகளின் உறவானது குறிப்பாக அமெரிக்காவின் உறவுநிலையானது மிகவும் நெருக்கமடைந்துள்ளது. இவ்வாறான உறவுநிலையானது சிறிலங்காவில் சீர்திருத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான உந்துவிசையாக அமைகிறதா?

பதில்: சிறிசேன அரசாங்கத்தை அவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பாராட்டியிருந்தன. ஆனால் இதே நிலை தற்போதும் காணப்படுகிறதா என்பது சந்தேகமே. இதற்கான வேற்றுத் தெரிவை அனைத்துலக நாடுகள் கொண்டிருக்காமல் இருக்கலாம். ஆனால் சிறிசேன அரசாங்கத்தின் முன்னேற்றமற்ற செயற்பாடுகள் இந்த நாடுகளை தற்போது அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளன என்பது நிச்சயமானதாகும். இந்த நாடுகளின் பாராட்டுக்கள் மற்றும் ஆர்வமான அணுகுமுறை போன்றன சிறிலங்காவில் சீர்திருத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான உந்துதலை வழங்கவில்லை. சிங்களத் தலைவர்கள், சிறுபான்மை சமூகத்தை நசுக்குகின்ற பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். இந்த நிலையானது சிறுபான்மையினருக்கு குறிப்பாக தமிழ் மக்களுக்குச் சார்பான இதயசுத்தியுடனான சீர்திருத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு அனுமதிக்காது. இடைக்கால நீதிப் பொறிமுறையை உள்ளடக்கிய சீர்திருத்தமானது அனைத்துலக சமூகத்திடமிருந்து எழும் அழுத்தங்கள் மூலம் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.

கேள்வி: நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடர்பாக தாங்கள் ஏதாவது எதிர்வுகூறல்களைக் கொண்டுள்ளீர்களா?

பதில்: எதுவுமில்லை.

நன்றி: வழிமூலம் – Huffington post

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
January 2020
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்