வருடல்

செய்திகள்

தமிழரசுக் கட்சிக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதிலடி !

உங்கள் சென்ற வாரக் கேள்விக்கான பதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளரை பதில் தர வைத்துள்ளது. அதற்கு உங்கள் மறு பதிலை  எதிர்பார்க்கின்றோம் என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் கேட்டபோது அதற்கு பதிலளித்த அவர்…..

ஏட்டிக்குப் போட்டியாக பதில்கள் இறுத்து பத்திரிகைகளுக்கு நல்ல தீனியைப் போட்டுக் கொண்டு இருக்கலாம். ஆனால் சமூகத்தில் பல சிக்கல்களை இது ஏற்படுத்தும். அதனால் நான் பொதுவாக முக்கிய காரணங்கள் இருந்தாலே அன்றி இவ்வாறான வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடுவதில்லை. எனினும் நீங்கள் கேட்பதால் பதில் தருகின்றேன்.

முதலில் எனது மாணவர் கௌரவ துரைராசசிங்கம் அவர்கள் கிறிஸ்மஸ் தினத்தில் நான் ஒரு அரசியல் அறிக்கை விடுத்ததாகக் கூறியுள்ளார். அவர் வாராவாரம் மக்களின் கேள்விகளுக்கு நான் பத்திரிகைகளில் பதில் அளித்து வருவதை அறியாதுள்ளார் போல் தெரிகிறது.

அரசியல் அறிக்கை விட வேண்டிய அவசியம் எனக்கிருக்கவில்லை. மக்களின் கேள்விகள் என்னை உசுப்பும் போது அவற்றிற்கே பதில் அளித்து வருகின்றேன். எந்த ஒரு கேள்வியும் யாரோ ஒருவர் எழுப்பிய ஐயப்பாட்டின்விளைவே. அந்த ஐயத்தைத் தீர்க்க முயன்று வருகின்றேன்.

இது கூட நண்பர் கௌரவ துரைராசசிங்கத்திற்குப் பதில் அளிக்கும் முகமாக நான் கூறும் கூற்று அல்ல. உங்கள் கேள்வி அவ்வாறானதாக இருப்பதால் பதில் தருகின்றேன்;.

நண்பரின் கூற்றை நான் இன்றைய 30.12.2017 உதயன் பத்திரிகையைப் பார்த்தே பதில் இறுக்கின்றேன். அதில் கூறியிருப்பனவற்றைக் கவனத்திற்கு எடுத்து பதில் தருகின்றேன்.

முதலாவதாக நான் தமிழரசுக் கட்சியைப் பிரத்தியேகமாகக் கண்டித்திருந்ததாகக் கூறி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் மற்றைய கட்சிகளும் அங்கம் வகிப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
அப்படி அல்ல.

தமிழரசுக் கட்சியினர் என்னை விமர்சனம் செய்வதாகவே சென்ற வாரக் கேள்வி அமைந்திருந்தது. அதனால்த் தான் அதற்குப் பதில் தர வேண்டியிருந்தது. அவ்வாறான கேள்வி என் மீது தொடுக்கப்படாதிருந்தால் நான் மௌனமாக இருந்திருப்பேன். என்னை விமர்சிப்பவர்கள் தமிழரசுக்கட்சியினரே என்றிருக்கும் போது அந்த விமர்சனங்களுக்குப் பதில் இறுக்காமல் வேறு யாருக்கு நான் பதில் அளிக்க வேண்டும் என்று கௌரவ நண்பர் அவர்கள் எதிர்பார்க்கின்றார்?

மேலும் தேர்தல் வரும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக அறிக்கை வெளியிடுவது வழமை என்றும் கூறியுள்ளார். இதுவுந் தவறு. என்னைப் பற்றிய பல விமர்சனங்கள் தவணைக்குத் தவணை எழுவதால்த்தான் நான் பதில் கூற வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.

அவ்வாறான விமர்சனங்கள் தேர்தல்கள் வரும் போது எழுவதை வைத்து நான் வேண்டுமென்றே தேர்தல் காலங்களில் எதிர் அறிக்கைகளை விடுத்து வருகின்றேன் என்று கூறுவது சட்டத்தரணியான கௌரவ நண்பருக்கு அழகல்ல. ஏதோ காத்திருந்து நான் அறிக்கை விடுவதாக என்னைச் சித்திரித்துள்ளார்.

அவ்வாறு அறிக்கைகள் விட வேண்டிய அவசியம் எனக்கில்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றேன் கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும். மக்கள் கேளாது தட்டாது இருந்தால் நான் மௌனியாகிவிடுவேன்.
அவர் கூறும் விடயங்களைப் பார்ப்போம்.

வவுனியாவில் என் பெயரை முன்மொழிந்தது தானே என்கின்றார். என் மாணவர் என்ற முறையில் அவ்வாறு செய்திருக்கலாம். அதற்கு நான் நன்றி கூற முடியாது. ஆறு மாதங்கள் அரசியலுக்கு வர முடியாது என்று தொடர்ந்து கூறியும் விட்டபாடில்லாததால்த் தான் எல்லோரும் சேர்ந்திருந்தழைத்தால் அவர்கள் கோரிக்கையைப் பரிசீலனை செய்வேன் என்று கூறி அவ்வாறு அவர்கள் கோரியதால்த்தான் நான் அரசியலுக்கு வர வேண்டியிருந்தது.

பேராசிரியர் சிற்றம்பலம் அவர்கள் உண்மையில் வழிப்போக்கர்களைக் கட்சிக்குள் கொண்டுவராதீர்கள் என்று கூறினாரோ தெரியாது. அவ்வாறு கூறியிருந்தால் அதில் தவறென்ன? கட்சியின் ஆரம்பகால உறுப்பினர் அவர். படித்தவர். பண்புள்ளவர். அவரைப் புறந்தள்ளி வழிப்போக்கர்கள் குளிர்காயும் கட்சியாகத் தமிழரசுக் கட்சியை மாற்றியமை அவருக்கு ஆத்திரத்தை ஊட்டியிருக்கக்கூடும்.

நான் கட்சிகளின் அரவணைப்பில் வாழ்ந்தவன் அல்ல. என்னை கட்சிகளுக்குள் கட்டுப்பட வைக்கவுஞ் சற்றுக் கடினமாக இருக்கும். காரணம் கட்சி அரசியலே எமது நாட்டைச் சீரழித்துள்ளது என்ற கருத்தைக் கொண்டவன் நான். தம்பி மாவை கூட அண்மையில் கட்சி பேதம் பார்க்காமல் வாக்களியுங்கள் என்று கூறியதாகப் பத்திரிகைச் செய்தியொன்றை வாசித்தேன். கட்சிகளின் போக்கு கவலை தருவதாக அமைந்துள்ளது.

என்னைவிட அனந்தி கூடிய வாக்குகள் பெற்றுவிடுவார் என்ற கவலை அவர்களுக்கு இருந்ததாகக் கௌரவ நண்பர் கூறுகின்றார். அனந்தி கூடிய வாக்குகள் அவ்வாறு பெற்றிருந்தால் தமிழ் மக்கள் பெண்களை எந்தளவு மதிக்கின்றார்கள் என்பது தெரியவந்திருக்கும். அதில் என் மதிப்புக் குறைய எதுவுமே இருக்கவில்லை. ஒரு வேளை ஒரு பெண்ணிற்கு முதல்வர் பதவி கொடுக்கக்கூடாது என்ற பயத்தில் நண்பரும் மற்றவர்களும் காரியத்தில் இறங்கினார்களோ தெரியாது.

இன்று மிக முக்கியமான அமைச்சுப் பதவிகளுக்குப் பொறுப்பாக இருந்து அனந்தி தனது கடமைகளைப் பொறுப்புடன் செய்து வருகின்றார்.

அடுத்து உயர் மட்டப் பதவியில் இருந்து வந்ததால் மக்களுடன் மக்களாக நான் மாறமுடியாது போய்விடும் என்று யாரோ கூறியதாகக் கூறினார். அந்தக் கூற்று இன்று மெய்யாகிவிட்டது என்றார். அவ்வாறு மெய்யானதால்த் தானா எனக்கு எதிராகத் தமிழரசுக் கட்சி நடவடிக்கைகள் எடுத்த போது, பொது மக்கள் முண்டி அடித்துக் கொண்டு வந்து எனது வாசஸ்தலத்திற்கு முன் நின்று எனக்குச் சார்பாகக் குரல் எழுப்பினார்கள்?

நான் எந்த மட்டத்தில் இருந்து வந்தவன் என்பது அவர்களின் கரிசனையாக அமையவில்லை. இவன் எப்பேர்ப்பட்டவன் என்பதை அவர்கள் அலசி ஆராய்ந்தே சதிகளில் இருந்து என்னைக் காப்பாற்றினார்கள். நண்பருக்கு ஒன்று கூற விரும்புகின்றேன்.
நெஞ்சத்தில் அன்பிருந்தால் அதனைப் பொது மக்களால் அடையாளம் கண்டு கொள்ள முடியும். கேவலம் பறவைகளும் விலங்கினங்களும் எமது அன்பை அடையாளம் காண்கின்றன. மக்களால் முடியாதா?
அடுத்து கொழும்புடன் நல்லுறவைப் பேணவேண்டும் என்கின்றார் நண்பர்.

கொழும்பில் பிறந்து வளர்ந்தவன் நான். நாட்டின் பெரும்பாலான இடங்களில் நான் ஏதோ விதத்தில் சம்பந்தங் கொண்டிருந்தவன். நாட்டின் மூன்று மொழிகளுடனும் நான்கு மதங்களுடனும் ஓரளவு பரீட்சயம் பெற்றவன். எனவே தெற்குடன் நடந்து கொள்ள நண்பர் எனக்குச் சொல்லித்தரக்கூடாது. நண்பர் போன்றவர்கள் தெற்குடன் நல்லெண்ணங் கொள்ள வேண்டும் என்றால் அவர்களுக்குப் பணிந்து போக வேண்டும் என்ற கருத்தை உடையவர்களாகத் தென்படுகின்றார்கள்.

தெற்கிற்கு அடங்கிப் போகும் ஒருவரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைத்திருந்தால் நண்பரைப் போன்ற ஒருவரையே முதலமைச்சராக நிறுத்தியிருக்கும். புகழ்பாடி, பணிந்து, இரந்து, எவரதும் பெரிய மனதின் பெறுபேறுகளைக் கொண்டு தமிழ் மக்களின் உரித்துக்களைப் பெற வேண்டிய அவசியம் எமக்கில்லை.

தம்பி பிரபாகரன் அவர்கள் அரசியல் சூட்சுமத்தில் அனுபவம் முதிர்ந்தவர்களின் அறிவுரைகளைப் புறக்கணித்திருக்கலாம். அதனால் மரணத்தையுந் தழுவியிருக்கலாம். ஆனால் மண்டியிட்டு மலர் மாலை பெற வேண்டிய அவசியம் அவருக்கு என்றுமே இருந்தில்லை. நாம் இந்நாட்டின் மூத்த குடிகள். எமது தகைமை உலகறிந்தது.

எனினும் அந்த உண்மையைக் கொழும்பு உதாசீனம் செய்து வருகின்றது. கொழும்புடன் முரண்படாது எவ்வாறு எமது உரிமையைப் பெற்றெடுப்பது? 2016ல் தக்க தீர்வைப் பெற்று விடுவோம் என்று முரண்படாது வாழ்ந்து வந்த எம் தலைவர் கூறினாரே! பெற்று விட்டோமா? ஆடுற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடுற மாட்டைப் பாடிக் கறக்க வேண்டும்!

என் செயற்பாட்டால் வடமாகாணத்தின் மீது வினாக்குறி எழுந்துள்ளதாகக் கூறுகிறார். அதனால்த் தான் கட்சித் தலைமைகளைக் கூப்பிடாது எமது வடமாகாண முதல்வரை அழைத்து மலேசியப் பிரதம மந்திரி கருத்துப் பரிமாற்றம் அண்மையில் நடாத்தினாரா? அச்சந்திப்பை நிறுத்த சிலர் முயன்றதின் பின்னணி என்ன? வினாக்குறியா?

நான் மாகாண முதலமைச்சர்கள் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்று யார் கூறினார்கள்? கலந்து கொண்டது மட்டுமல்லாமல் காத்திரமான கருத்துக்களையும் முன்வைத்ததைக் கூட்டக் குறிப்புக்கள் கூறுவன. ஏதோ ஒரு சில கூட்டங்களுக்குப் போக முடியாமற் போனதை ஒரு பொருட்டாகக் கருதி நண்பர் குற்றஞ் சுமத்துவது சிரிப்புக்கு இடமளிக்கின்றது.

ஆனால் ஒன்று மட்டும் சட்டத்தரணியான நண்பர் கருத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகாரங்களைக் கூட்டித்தர வேண்டும் என்று மற்றைய முதலமைச்சர்கள் கேட்பது ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் உள்ளேயே. அது எமக்கு அப்போதைக்கு ஒரு சில நன்மைகளைப் பெற்றுக் கொடுத்தாலும் எமது இனத்தின் நீண்டகால வாழ்க்கைக்கு நன்மை அளிக்காது.

அல்பிரட் துரையப்பாவோ, குமாரசூரியரோ, டக்ளஸ் தேவானந்தாவோ கேட்டார்கள் கொடுத்தோம் என்று தான் இருக்கும். தமிழர்கள் உரித்துடன் கேட்டதை நாம் அள்ளிக் கொடுத்தோம் என்றிருக்காது. இன்று நாம் தெற்கின் தயவிலேயே வாழ்கின்றோம். அதை நண்பர் உணராது உள்ளார். பல்லிளித்துப் பயன் பெறுவதென்றால் எந்தத் தமிழ்த் தலைவரிலும் பார்க்கக் கூடிய சலுகைகளை தெற்கில் இருந்து பெற விக்னேஸ்வரனால் முடியும். அவன் தெற்கில் பிறந்து வளர்ந்தவன்.

ஆனால் அவ்வாறு பல்லிளித்துப் பெற்றால் காலக் கிரமத்தில் எம்மவர் அடிமைகள் ஆகிவிடுவார்கள். சிங்களக் குடியேற்றங்கள், சிங்கள மொழி உள்ளீடல்கள், பௌத்த மதத்தினர் உள்ளீடல்கள் என்று எம்மை 25 வருடங்களில் இருந்த இடந் தெரியாது ஆக்கிவிடுவார்கள். நாமும் வெளிநாடுகள் நோக்கித் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்போம். ஜெரூஸலத்திற்கு நடந்துள்ளதைப் பாருங்கள். ஆகவே எமது தனித்துவத்தைப் பேணிக் கொண்டு தான் நான் தெற்குடன் உறவாடி வருகின்றேன். பல தெற்கத்தைய அமைச்சர்களுடன் கூடி பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றேன்.

என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் எனக்குச் சமமானவர்களே. எனக்கு மேலானவர்கள் அல்ல. கூனிக் குறுகி அவர்களிடம் யாசகம் பெற வேண்டிய அவசியம் எனக்கில்லை. பிரபாகரன் பிறந்த மண்ணில் இவ்வாறு யாசகம் பெற எத்தனிப்போர் வாழ்ந்து வருவது விந்தையே!

தமிழரசுக் கட்சியின் கூட்டங்களுக்கு எனக்கு அழைப்பு அனுப்பியதாகக் கூறுகின்றார். கூட்டங்களில் நான் கலந்து கொண்டதாகவும் கூறுகின்றார். மதியத்துடன் எழுந்து சென்றுவிடுவார் என்றும் கூறியுள்ளார். கூட்டங்கள் உரியவற்றைப் பரிசீலித்தால், உரியன பற்றிப் பேசினால், உண்மையை உரைத்துப் பார்க்க முன் வந்தால் எவர் தான் பாதியில் எழுந்து போகப் போகின்றார்கள்?

ஆனால் ஒன்றை மட்டும் அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். தமிழ் மக்கள் பேரவை தொடங்கிய நாள் தொடக்கம் எனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பதை ஏற்றுள்ளார். உண்மையில் அதன் பிறகு தான் என்னை வலிந்து அழைத்திருக்க வேண்டும். அப்பொழுது எனது கருத்துக்களை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருப்பேன். தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் சார் குரல், கட்சி அல்ல என்பதை விளங்கப்படுத்தியிருப்பேன்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆரம்ப காலத்தில் கொழும்பில் அதற்கான குழுக்கள் கூட்டப்பட்டன. அக் குழு உறுப்பினர்கள் சட்ட ரீதியான சில நன்மைகளை என்னிடம் பெற்றதுண்டு. அது பற்றி அவர்களிடம் கேட்டால் தெரிந்து கொள்ளலாம்.

என்னிடம் பெற்ற அந்த அடிப்படைத் தரவுகளை வைத்து கட்சி பதிவு செய்யப்பட்டதாகவே நான் எண்ணியிருந்தேன். அரசியலுக்குள் வந்த பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் பதிவு செய்யப்படவில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன்.
அப்போது தான்  நண்பர் ஆனந்தசங்கரியின் கட்சி ஆகியன தமிழரசுக் கட்சியின் சின்னத்திற்குக் கீழேயே தேர்தலில் ஈடுபட்டு வருகின்றன என்பதைப் புரிந்து கொண்டேன். தமிழரசுக் கட்சியின் சின்னத்தின் கீழ்த் தான் போட்டியிடப் போகின்றோம் என்று அறிவதற்கு முன் நான் எவ்வாறு அது பற்றி அறிந்திருக்கக்கூடும் என்பதற்கு நண்பர் தான் பதில் தர வேண்டும்.

போர்க்குற்றங்கள், இன அழிப்பு பற்றி நாங்கள் காரில் கௌரவ சுமந்திரனுடன் பேசி வந்ததைக் குறிப்பிட்டுள்ளார்.
நண்பர் ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இன அழிப்பு என்பது உண்மை. அதை நீதிமன்றில் நிரூபிக்க முடியுமா என்பது இன்னொன்று. நிரூபிக்க முடியாது போகும் என்று கௌரவ சுமந்திரன் அவர்கள் கூறிக் காரணங்களை எடுத்தியம்பினார்.

அதில் இருந்த சட்டச் சிக்கல்களை உணர்ந்து கொண்டேன். ஆனால் வடமாகாணசபை இயற்றிய பிரேரணை மக்களின் கருத்தைப் பிரதிபலித்த ஒன்று. அது சமூகம் சார்ந்தது. உண்மை சார்ந்தது. அதனைச் சர்வதேச அரங்கில் நிரூபிக்க முடியுமா, அதில் உள்ள சட்டச் சிக்கல்கள் எவை என்பன வேறு விடயங்கள். ஆகவே சட்ட ரீதியாக நான் சுமந்திரனுடன் பேசியதை சமூக ரீதியாகக் கொண்டு வந்த பிரேரணையுடன் கலந்து நண்பர் குளப்பி அடிக்கக்கூடாது. ஒருவர் இன்னொருவரைக் கொன்றுள்ளார் என்று வைத்துக் கொள்வோம். சாட்சியங்கள் இல்லாததால் கொன்றவர் விடுதலை பெற்று விடுகின்றர். விடுதலை பெற்றதால் உண்மையைப் பொறுத்த வரையில் அவர் கொலை செய்யவில்லை என்று ஆகிவிடுமா?

ஆயிரம் முரண்பாடுகளையுந் தன்னுள் அடக்கி தலை நிமிர்ந்து நிற்கக் கூடியது சத்யம் அல்லது உண்மை என்று சங்கராச்சாரியாரின் குருவின் குரு கௌடபாதர் அவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கூறிவிட்டார். இனவழிப்பு உண்மை. ஆனால் நிரூபிப்பது கடினம் என்பதால் உண்மை பொய்மையாகாது. நிரூபிப்பது சிரமம் என்பதால் உண்மையை வெளியிடாது இருக்க வேண்டிய அவசியம் எமக்கு இருக்கவில்லை.

கௌரவ சிவாஜிலிங்கம் அவர்கள் வடமாகாண சபையில் இன அழிப்புப் பிரேரணையைக் கொண்டு வந்த போது அது முழுமையுடையதாக எனக்குப்படவில்லை. அதற்காக அதைக் கூடிய வலுவுடன் தயாரித்து சபையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறினேன். இதனை நாங்கள் அனைவருஞ் சேர்ந்தே செய்யலாம் என்று கூறி அவரின் பிரேரணையைத் தவணை போட்டேன். அதன் பின் கௌரவ சுமந்திரன் அவர்களின் துணையையே நான் நாடினேன். அவர் அதனை முழுமையாகத் தயாரித்துத் தருவதாகக் கூறி காலம் கடத்தி வந்தார்.

2014ம் ஆண்டு இறுதி வரை அவர் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. கடைசியில் கௌரவ சிவாஜிலிங்கம் அவர்கள் எப்படியாவது தனது பிரேரணை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று 2014ம் ஆண்டு நவம்பர் அல்லது டிசெம்பர் மாதத்தில் கூட்டத்தின் போது வாதாடினார். அப்பொழுது தான் நான் அதனை நானே உருவாக்கித் தருகின்றேன், கடைசியாக ஒரு தவணை போடும் படி கேட்டு பெற்றுக் கொண்டேன். புதிய அரசாங்கம் வந்ததற்கும் பிரேரணைக்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை.
புதிய அரசாங்கம் வந்ததால் இப் பிரேரணை கொண்டுவரவில்லை. இது ஒரு தொடர் நிகழ்ச்சி. வடமாகாணசபையில் நடந்த ஒரு தொடர் நிகழ்ச்சி. கட்சித் தலைமைக்குத் தெரிந்த ஒரு தொடர் நிகழ்ச்சி. கட்சித் தலைமைகள் அனுசரணை வழங்கவுமில்லை. எதிர்க்கவுமில்லை.

கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனக் கொள்கையை ஏற்ற நான் திடுதிடுப்பென்று மாறிவிட்டேன் என்று கூறினார் நண்பர். அப்படியல்ல. மாறியது நான் அல்ல. கட்சித் தலைமைதான் மாறியது. அதை அவர்களுக்கு மக்கள் சார்பாக எடுத்துக் கூறவே தமிழ் மக்கள் பேரவை பிறந்தது.

அடுத்துக் கூறுவது தான் விந்தையிலும் விந்தையான கூற்று. தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவி தம்பி மாவைக்கு சென்றடைந்ததே எனது மனமாற்றத்திற்குக் காரணம் என்கின்றார். கட்சி அரசியலின் வெறுப்பு மிக்க செயற்பாடுகளைக் கண்டு வந்தவன் நான். அரசியலுக்குப் புதியவன். ஏற்கனவே நல்ல பதவிகளை வகித்திருந்தவன். கேவலம் ஒரு கட்சியின் தலைமைத்துவத்திற்காகக் கனாக் காண நான் என் சில மாணவர்கள் போன்றவனா?

அரசாங்கத்தால் ஒரு முதலமைச்சருக்கு வழங்கப்படும் கௌரவம் மத்தியின் முன்னணி அமைச்சர்களுக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு இணையானது. கட்சித் தலைவர்களுக்கு அவ்வாறான கௌரவத்தை அரசாங்கம் அளிக்கவில்லை. ஆகவே மாண்புமிகு முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டு கட்சித் தலைவர் பதவியைப் பெற ஆசைப்பட்டதாகக் கூறுவது நண்பரினதும் நண்பருக்கு இந்தக் கடிதத்தை வெளியிடுமாறு பணித்தவருக்கும் இருக்கும் பதவி மோகத்தையே எடுத்துக் காட்டுகின்றது.

தாம் தமக்குக் கிடைக்க வேண்டும் என்று கனாக்காணும் பதவி மேல் எனக்கு மோகம் இருந்தது என்று கூறுவது அவர்களின் வங்குரோத்து அரசியலையே வெளிக்காட்டுகின்றது. அவர்களுக்காக நான் அனுதாபப்படுகின்றேன்.
2 ½ வருடங்களே பதவியில் இருப்பதாக நான் கூறியதாகக் கூறுகின்றார் நண்பர்.

அப்படியல்ல. நான் அரசியலுக்குள் வரமுடியாது என்று முரண்டுபிடிக்க எம்முள் யாரோ ஒருவர் 2 ½ வருடங்கள் நீங்கள் முதலமைச்சராக இருந்துவிட்டுப் போங்கள். அதன் பின் வேறொருவரை நியமிக்கலாம் என்று கூறினார்.

அதற்கு நான் அரசியலே வேண்டாம் என்கின்றேன். நீங்கள் காலவரையறை அரசியலை என்மீது திணிக்கப் பார்க்கின்றீர்கள் என்றேன். 2 ½ வருடங்கள் தான் நான் முதலமைச்சராக இருப்பேன் என்று நானோ, இருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ எஞ்ஞான்றுங் கூறவில்லை.

தமிழரசுக்கட்சியின் தலைவராக மாவை வந்ததில் மகிழ்ச்சி அடைந்தவன் நான். அவர் எத்தனை முறை மக்களுக்காகச் சிறை சென்று வந்த ஒருவர் என்பதை நான் அறிந்திருந்தேன். அவரையும் காசிஆனந்தனையும் மட்டக்களப்பில் குற்றப் பத்திரிகை பதியாது தொடர்ந்து பல மாதங்கள் அரசாங்கம் சிறையில் அடைத்திருந்ததைக் கண்ட நான் நீதித்துறைக்கு வந்த சில மாதங்களிலேயே 1979ம் ஆண்டில் மட்டக்களப்பு ஒன்றிணைந்த மாவட்ட நீதிபதியாக அவர்களைப் பிணையில் செல்ல அனுமதித்தேன்.

அப்போது தான் மாவை பல தடவைகள் மக்களுக்காகச் சிறை சென்றதை அறிந்து கொண்டேன். அதற்காக அவர் மீது ஒரு மதிப்பு இன்றும் எனக்குள்ளது. அப்பேர்ப்பட்ட பழுத்த அனுபவம் மிக்க ஒரு அரசியல்வாதி தமிழரசுக் கட்சியின் தலைவராக வருவதை நான் எப்படி வயிற்றெரிச்சலுடன் பார்க்க முடியும்? அவரின் தேர்வில் முழு மகிழ்ச்சியடைந்தவர்களில் நானும் ஒருவன்.

நண்பர் துரைராஜசிங்கம் போன்றவர்கள் இவ்வாறான பதவிகளுக்காகக் கனாக்கண்டு வருவதை என்மேல் திணிக்கப் பார்க்கின்றார்கள். பதவிகளுக்காகக் கனாக்காணவோ அலையவோ எனக்குத் தேவையில்லை. முழுமையான வாழ்க்கையை ஏற்கனவே நான் வாழ்ந்துவிட்டேன். எல்லாம் கிடைத்துவிட்டன. அமைதியான ஓய்வு நிலையொன்றே எனக்குத் தேவையாக இருந்தது. யாவரும் வலிந்து கேட்டதால்த் தான் இப்பதவிக்கு வந்தேன்.

இப்பதவியின் பலவிதமான கடமைகளை, சுமைகளைப் போகப் போகத்தான் அறிந்தேன். அவ்வாறு இருக்கும் போது ஒரு கட்சியைத் தலைமை ஏற்று நடத்த வேண்டும் என்ற எண்ணம் என்னைப் போன்ற அகவை எண்பதை எட்டும் ஒருவருக்கு வரமுடியுமா? நண்பரின் குற்றச்சாட்டு நகைப்புக்கு உரியது. அவருக்கும் அவரை ஆட்டிப் படைக்கும் சிலருக்கும் இருக்கும் நித்திய கனாக்களை என் மீது திணிக்கப் பார்க்கின்றார்கள்.

ஊர்த் தேரைச் சேர்த்து இழுக்க வேண்டியது பற்றி நண்பர் கூறியுள்ளார். நாம் யாவரும் ஒன்றிணைந்து இழுக்க வரும் போது ஒரு சிலர் மட்டும் அமெரிக்கா நோக்கியும் கொழும்பு நோக்கியும் தேரை இழுக்க முயற்சிப்பது கவலை அளிக்கின்றது. அப்படி இருந்தும் நான் தேர் இழுப்பவர்களுடன் கூடி வடத்தில் கைவைத்துக் கொண்டே எனது கருத்தை வெளியிட்டுக் கொண்டு வருகின்றேன். வடத்தைக் கைவிட்டுச் செல்லவில்லை. தேரை நாம் நிர்ணயித்த இடம் நோக்கி நகருங்கள். கொழும்பு நோக்கியும் அமெரிக்கா நோக்கியும் நகர்த்தாதீர்கள் என்று தான் சொல்லி வருகின்றேன்.

கருத்து வெளியிடுமாறு பத்திரிகைகளினால் கோரப்பட்ட போது நான் இடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்திருக்கவில்லை என்று கூறியது உண்மை. அதன் பின் வாசித்தேனோ இல்லையோ ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஒற்றையாட்சிக்கான ஆங்கிலச் சொல்லை  நீக்கி அதற்குப் பதிலாக சிங்களத்தில் ஒற்றையாட்சிக்கு ஒப்பான ‘ஏகிய’ என்ற பதத்தையும் தமிழில் கூட்டாச்சிக்கு ஒப்பான ‘ஒருமித்த’ என்ற பதத்தையும் அறிக்கையில் பாவித்ததில் இருந்து மக்கள் மீது திணிக்கப்பட இருக்கும் மோசடி புலப்படுகிறது.

ஏகிய ராஜ்ய என்றால் ஒற்றையாட்சி. தமிழில் தரப்படும் ‘ஒருமித்த’ என்ற சொல் சிங்களத்தில் “எக்சத்” என்று தரப்பட்டிருக்க வேண்டும். இல்லை என்றால் தமிழில் ஒற்றையாட்சி என்று தரப்பட்டிருக்க வேண்டும். மக்களை ஏமாற்றப்பார்க்கும் இடைக்கால அறிக்கையை நான் நிராகரித்ததில் என்ன தவறு? எவ்வாறு வடகிழக்கு இணைப்பு 18 வருடங்களுக்கப் பின் இல்லாமல் ஆக்கப்பட்டதோ, இவ்வாறான இரட்டை வேடந் தாங்கி வரும் அரசியல் யாப்பை ‘ஏகிய’ என்ற ஒரு சொல்லை வைத்தே ஒற்றையாட்சி நடைமுறையில் நாடு இருந்து வருகின்றது என்று நீதிமன்றங்கள் தீர்மானித்து விடுவன.

ஒற்றையாட்சி என்றால் பெரும்பான்மையினரின் ஆதிக்கம் என்று பொருள்படும். எமக்கு நேர்ந்த அரசியல் துயரங்கள் யாவும் இந்த ஆதிக்கத்தின் பிரதிபலிப்பே.

15. அரசமைப்பு புரிந்துணர்வோடு தயாரிக்கப்பட வேண்டியதொரு ஆவணம் என்று நண்பர் கூறுவதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. ஆனால் எந்த அளவுக்கு அவ்வாறு தயாரிக்கப்படும் அரசமைப்பு தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களையும் அபிலாஷைகளையும் நிறைவேற்றும் என்பதே கேள்வி. நல்லிணக்கம் என்ற பெயரில் நாம் பலதையும் விட்டுக் கொடுத்து முதலில் தரப்பட்ட 13வது திருத்தச் சட்டத்திற்கு ஒப்பான ஒரு சட்டத்தை ஒற்றையாட்சியின் கீழ் உருவாக்குகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அதிகாரம் முற்றிலும் மாகாணத்திற்குப் பகிரப்படுமா, அதில் மத்தி தலையிடாதா, எமது மண்ணின் உரித்து எமக்குரியதாக்கப்படுமா இல்லையா, மத்தியின் உள்ளீடல்கள் எவ்வாறு அமையும், அதன் காரணமாக எமக்கு ஏற்படப்போகும் பாதிப்புக்கள் எவை என்பன பற்றியெல்லாம் நாம் சிந்திக்கும் போது அடிப்படை அதிகாரம் யார் கைவசம் இருக்கின்றது என்பதே முக்கியமாகக் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டியிருக்கும். எமது தேவைகள், நடவடிக்கைகள், எதிர்பார்ப்புக்கள் சம்பந்தமாக மத்திக்குத் தீர்மானம் எடுக்க வசதி செய்து கொடுத்தால் எமது தனித்துவம் அழிந்து விடும். எமது மண்ணுஞ் சுற்றியுள்ள கடலும் பறிபோய்விடுவன.

16. எமது அரசியல்யாப்பு எழுத்திலான யாப்பு. பிரித்தானியாவின் யாப்பு எழுதப்படாததொன்று. அங்கு சர்வதேச எதிர்பார்ப்புக்களுக்கு, சர்வதேசச் சட்டத்திற்கு அமைய மக்கள் தமது கொள்கைகளை, நடைமுறைகளை மாற்ற முடியும். எழுத்திலான அரசியல் யாப்பு அவ்வாறான மாற்றங்களுக்கு இடங் கொடுக்காது. ஆகவே இவற்றை வைத்துக் குளப்பி அடிப்பது சட்டத்தரணிகளுக்கு கைவந்த கலையாக இருக்கலாம். யதார்த்தம் வியாக்கியானங்களுக்கு அப்பாற்பட்டதொன்று. எழுத்திலான அரசியல் யாப்பைப் பேசி மாற்ற முடியாது. அதனால்த்தான் எமது தனித்துவத்தைப் பேணும் முகமாக சமஷ்டி பற்றிக் கூறி வருகின்றோம்.

17. சிங்களவர் பற்றிய என் கருத்துக்கள் கடுமையானது என்கின்றார் நண்பர். ஒன்றை மறந்து விட்டார் நண்பர். பிழையான கருத்துக்களின் அடிப்படையில்த்தான் சிங்கள ஏகாதிபத்தியம் இன்று நாட்டை ஆள்கின்றது. அதனைச் சுட்டிக்காட்டாதீர்கள். அவர்களுக்குக் கோபம் வரும். ஒன்றும் தரமாட்டார்கள் என்கிறார். அங்கு தான் தவறு இழைக்கப்பட்டுள்ளது. பொய்மையின் அடிப்படையில் சிங்கள இனத்தின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டுள்ளது. அதனை ஏற்று அவர்கள் தருவதை பெற்றுக் கொள்வோம் என்றால் எமக்கு என்ன கிடைக்கப் போகின்றன? இந்த நாடு சிங்கள பௌத்த நாடு, நாம் கூறுவதை மற்றைய இனங்கள் ஏற்க வேண்டும். அதற்கு அனுசரணையாக மரத்தைச் சுற்றிப்படரும் கொடிபோல் அவர்கள் வாழ வேண்டும் என்றால் காலாதி காலம் நாங்கள் பிச்சைக்காரர்களாகவே வாழ வேண்டிவரும். நினைத்த போது எமது பிச்சைப் பாத்திரத்தைக் கூடப் பறித்து விடுவார்கள். நண்பரினதும் அவருடன் சேர்ந்தவர்களினதும் அடிமை மனப்போக்கு வெளிப்படுகின்றது.

18. அடுத்து வித்துவச் செருக்கால் நாம் தருவதை ஏற்காதுவிட்டால் எமக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் நண்பர். எமது அண்மைய அரசியல் வரலாறு பற்றிக் கூறியுள்ளார். அதற்காக என்ன செய்ய வேண்டும் என்கின்றார் நண்பர்? அங்கு தான் உதைக்கின்றது. எதை எதையோ பறிகொடுத்து வந்த நாங்கள் இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கின்றார். அதாவது ஒற்றையாட்சியை ஏற்க வேண்டும்; சிங்கள ஏகாதிபத்தியத்தை ஏற்க வேண்டும்; பௌத்தத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும்; தனித்துவத்தை நாடுவது தவறு. சுயமாக எம்மை நாம் ஆள விழைவது தவறு என்றெல்லாம் சொல்லாமல் சொல்கின்றார். இதை ஏற்றுக் கொள்வது எனக்கு மட்டுமல்ல பல புத்தி ஜீவிகளுக்கும் பாமர மக்களுக்கும் கடினமாகவே இருக்கின்றது. இதைக் கூறவே தமிழ் மக்கள் பேரவை உதயமாகிற்று.

19. நடப்பியல் அறிந்து தமிழரசுக் கட்சி இன்று நடப்பதாக நண்பர் கூறுகின்றார். கூட்டாச்சி பற்றி சுமந்திரன் சிங்கள மக்களுக்கு விpளக்கி வருவதைக் குறிப்பிடுகின்றார். கூட்டாச்சிக்கு வித்திடாத ஒரு செயற்றிட்டத்தை வைத்துக் கொண்டு கூட்டாச்சி பற்றிப் பேசியதாகக் கூறியது எமக்கு ஆவலை எழுப்புகின்றது. எதைச் சுமந்திரன் கூறினார் என்பது முக்கியம். அவர் சிங்கள மக்களுடன் பேசினார் என்பது ஒரு அலகே. எதைப் பேசினார் என்பது மறு அலகு. எந்த சோபிததேரர் என்பதும் குறிப்பிடப் படவில்லை. ஒருவர் காலமாகி பல மாதங்கள் ஆகிவிட்டன.

20. மற்றவர்கள் தமது தயவின் அடிப்படையில் தருவனவற்றை ஏற்று அவற்றிற்கு நன்றிக் கடன்படுபவர்களை எலும்புத் துண்டுகளைப் பெறுவனவற்றுடன் ஒப்பிட்டது ஒரு தவறாக இருக்கலாம். அவ்வாறான உயிரினங்கள் கூட தமது வாலை மிதித்துவிட்டால் சத்தம் போட்டாவது எதிர்ப்பை வெளிக் காட்டுவன. காணி பறி போகின்றது. வாழ்வாதாரங்கள் பறிபோகின்றன. வாணிபம் பறிபோகின்றது. சுற்றுலாவும் எமது வளங்களும் சுமந்து செல்லப்படுகின்றன. குடியேற்றம் குயுக்தியுடன் ஈடேற்றப்படுகின்றன. காணாமல் போனோர் பற்றி கடுகளவுஞ் சிந்தனை இல்லை. பெண் தலைமைக் குடும்பங்கள் படும் பாடு பற்றி ஆராய ஆர்வமில்லை. இவற்றிற்காக ஒரு திடமான குரல் கூடக் கொடுக்காது தருவதை ஏற்போம் என்பது நண்பருக்குச் சரியாகப்படுகின்றனவா? அவரே பதில் தரட்டும்!

மாவீரர் நாள் 2018 – டென்மார்க்

மாவீரர் நாள் 2018 – கனடா (ரொரண்டோ)

மாவீரர் நாள் 2018 – லண்டன் (எக்ஸெல்)

மாவீரர் நாள் 2018 – பிரித்தானியா (ஒக்ஸ்பேட்)

மாவீரர் நாள் 2018 – சுவிஸ்

மாவீரர் நாள் 2018 – பிரான்ஸ்

27 November 2018
27 November 2018
BBC TAMIL NEWS 21/11/2018

முன்னைய செய்திகள்
December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
அதிகமாக பார்க்கப்பட்டவை
Twitter Varudal News
  • பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!
  • யாழ், பல்கலைக்கழகத்தில் “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கத்திற்கு அஞ்சலி!
  • யாழ் –  காரைநகரில் முத்தமிழ் விழா!
  • மைத்திரி, ரணில், கரு – மூவரும் இரகசியப் பேச்சு!
  • பாராளுமன்றத்தை கலைக்க முடியாது – உச்ச நீதிமன்றின் தீர்ப்பு வெளியானது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை