செய்திகள்
தமிழர்களுக்காக உரிமைக்குரல் எழுப்பி வந்த எழுத்தாளர் “ஞானி” காலமானார்!
தமிழ் தேசியத்தின்பால் ஈடுபாடு கொண்டு எமது தேசத்துக்காக சாகும் வரை குரல் கொடுத்தவர் ஞாநி.
அவர் இந்து நாளிதழில் பணியாற்றிய காலத்தில்தான் எமது தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களை ஆழமாக நேசித்து இந்து பத்திரிகை குழுமத்தையே எமது போராட்டத்தின் மீது நேசிக்க வைத்தவர். அவரது முயற்சியினால் தான் தேசியத் தலைவரின் புகழ் இந்திய நாட்டுக்கு தெரியும் சூழலை உருவாக்கியவர்.
முதல் முதலில் தமிழகத்தில் எமது விடுலைப் போராட்டத்துக்கான ஆதரவு நிலைப்பட்டை எடுத்து ஈழ ஆதரவுச் சக்திகளுடன் இணைந்து தனது தெருவழி நாடகங்களினூடாக ஈழத்தமிழர் படும் அவலங்களை வெளிக்கொண்டு வந்த பெருமைக்குரியவர்.
2009 ல் போர் உக்கிரமடைந்த போது அப்போர் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை வேரோடு சாய்ப்பதற்காகவே நடத்தப்படும் திட்டமிட்ட சதிவலை என போர்குரல் எழுப்பியவர்.
தமிழகத் தலைவர்கள் ஈழத்தமிழரின் மரண ஓலங்களை தமது அரசியலாக பயன்படுத்துகின்றனர் என பகிரங்கமாக குற்றம் சாட்டி எழுதியும் பேசியும் வந்தவர்.
தன் இறுதி மூச்சு உள்ளவரை ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்தவர்.
உதாரணமாக அண்மையில் இந்திய மத்திய அரசு தமிழகத்தில் இருக்கும் அகதி முகாங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தியபோது, தமிழர் தடுப்பு முகாம் ஒரு மரணப் புதைகுழி என பகிரங்கமாக குற்றம்சாட்டி , அவர்களுக்கான மறுவாழ்வு உறுதிப்படுத்த வேண்டும் என ஓங்கிக் குரல் கொடுத்தவர்.
இப்படி ஞாநி அவர்களின் ஈழத்தமிழர்களுக்கான ஆரவுக்குரல் நீண்டு செல்லக்கூடியது.
மாபெரும் எழுத்தாளுமை, நுட்பமான பார்வை, மறுக்க முடியாத விவாதங்கள் என தமிழ் எழுத்துப் பரப்பில் இடையறாது இயங்கிக் கொண்டிருந்த ஆளுமை ஒன்றை தமிழ்ச்சமூகம் இழந்திருக்கிறது.
மனிதர்களுக்கேயுள்ள இன்னும் கொஞ்சம் ஆண்டுகள் இருந்திருக்க கூடாதா? என்கிற ஏக்கம்தான் இன்று இரங்கல்களாக வெளிப்படுகின்றன.
“மனித உடலுடன் உறவாடும் மருத்துவர் எப்படி அதில் பொறுப்பின்றி விளையாட முடியாதோ, அதேபோல மனித மனங்களுடன் உறவாடும் சமூக படைப்பாளிகளும் பொறுப்பின்றி எழுத்தாளன் என்ற பெயரில் விளையாட முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.”
ஞாநி அவர்களுடனான எனது நெருக்கம் “தியாகி”திலீபனின் முதலாமாண்டு அகவணக்க கவியரங்க நிகழ்வு ஒன்றினூடாகவே தொடங்குகிறது. கவிஞர் மேத்தா,தோழர் சந்தானம், தோழர் அருள்மொழி, கவிஞர் புலமைப்பித்தன், முனைவர் நடராஜன் (சசிகலாவின் கணவர்), பேராசிரியர் சுபவீ, தோழர் இன்குலாப், ஊடகவியலாளர்களான தணிகைச்செல்வன்.குணாளன், திருமாவேலன்,ஜென்ராம், அருட்தந்தை ம.ஜெகத்கஸ்பார், காசி அண்ணர் என நீண்டு செல்லும் தமிழக சிந்தனையாளர்கள் மூலமாக தொடர்ந்த அந்த பிணைப்பு இன்று வரை தொடர்கிறது.
மேற்சொன்னவர்களில் சிலரை புலத்துக்கு அழைத்து எமது ஈழதேசத்து மக்கள் மத்தியில் நடைபெறும் எழுச்சி நிகழ்வுகளுக்கு வருவதற்கான முயற்சிகளை நான் மேற்கொண்ட போது அதற்கான ஏற்பாடுகளை செய்து தந்து எனது பொறுப்புக்களை நான் சரியாக செய்வதற்கு உறுதுணையாக நின்ற ஓர் களப்போராள.